பவன் கல்யாண், டிகேஎஸ் இளங்கோவன், பிரகாஷ் ராஜ் PT
இந்தியா

”பவன் கல்யாணுக்கு யாராவது சொல்லுங்க” - இந்தி திணிப்பு குறித்த கருத்துக்கு எழுந்த கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு தொடர்பா ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சொன்ன கருத்துக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.

Prakash J

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜனசேனா கட்சியின் 12ஆவது தொடக்க விழாவில் பேசிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், ”பல மொழிகள் நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டிற்கும் இந்த கொள்கை பொருந்தும். மொழிகளுக்கு எதிராக வெறுப்புணர்வை வளர்ப்பது விவேகமற்றது. இந்தியை எதிர்ப்பவர்கள், லாபத்திற்காக திரைப்படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்வது ஏன்” என கேள்வி எழுப்பிய அவர், “இஸ்லாமியர்கள் உருதுவில் தொழுகை நடத்துவதையும், கோயில்களில் சமஸ்கிருத்ததில் மந்திரங்கள் ஒதப்படுவதையும் குறிப்பிட்ட பவன் கல்யாண், இது தமிழ் அல்லது தெலுங்கில் செய்யப்பட வேண்டுமா” எனவும் கேள்வி எழுப்பினார். சனாதானம் தனது ரத்தத்தில் உள்ளதாகவும், அவர் கூறினார்.

பவன் கல்யாண்

பவனின் இந்தக் கருத்துக்கு பாஜக தலைவர் விக்ரம் ரந்தாவா, ”இந்தி எங்கள் தேசிய மொழி. அது மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, முந்தைய அரசாங்கங்கள் தேசியவாத கலாசாரத்தை நசுக்க முயன்றன. தெற்கிலும் இந்தி பயன்பாட்டை வலுவாக செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பாளர் டாக்டர் சையத் ஹபீசுல்லா, "தமிழ்நாடு ஒருபோதும் தனிநபர்கள் இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்வதை எதிர்த்ததில்லை. நாங்கள் எதிர்ப்பது இந்தி அல்லது எந்த மொழியையும் நமது மாநில மக்கள் மீது திணிப்பதைத்தான்.

மக்கள் இந்தி கற்க விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்யலாம். மத்திய அரசு NEP அல்லது PM SHRI பள்ளிகள் போன்ற கொள்கைகள் மூலம் இந்தி கற்றலை கட்டாயப்படுத்தும்போது இந்த பிரச்சினை எழுகிறது” என்றார்.

டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுகவின் மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "நாங்கள் 1938 முதல் இந்தியை எதிர்த்து வருகிறோம். கல்வி நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் காரணமாகவே தமிழ்நாடு எப்போதும் இருமொழி சூத்திரத்தைப் பின்பற்றும் என்று மாநில சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினோம். இந்த மசோதா 1968ஆம் ஆண்டு பவன் கல்யாண் பிறக்காதபோது நிறைவேற்றப்பட்டது. அவருக்கு தமிழ்நாட்டின் அரசியல் தெரியாது.

தாய்மொழியில் கல்வி கற்பதுதான் மக்களுக்கு பயிற்சி அளிக்க சிறந்த வழி என்று நாங்கள் கருதுவதால், நாங்கள் இந்தியை எதிர்ப்பது இது முதல்முறை அல்ல. பாஜக அரசிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெறுவதற்காக அவர் (பவன் கல்யாண்) பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் கொடுத்த பதிலடி!

இந்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜூம் தன்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், 'இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்' என்பது அந்த மொழி மீதான வெறுப்பல்ல, 'எங்கள் தாய்மொழியையும், நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்போம்' என்பதாகும். இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.