Loitering munition AI
இந்தியா

வானில் வேட்டையாடும் ‘திவ்யாஸ்திரா’.. இந்தியாவின் புதிய தயாரிப்பு!!

அது வானில் பறக்கும் சாதாரண விமானமல்ல... இலக்கைத் சல்லடை போட்டு தேடி, காத்திருந்து துல்லியமாக தாக்கும் சக்திவாய்ந்த ஆயுதம். இந்தியாவிலேயே உருவான ஜெட் இயந்திர ‘திவ்யாஸ்திரா Mk3’, பாதுகாப்புத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

இந்தியாவில் உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை, ஜெட் என்ஜின் மூலம் இயங்கும் ‘திவ்யாஸ்திரா Mk3’ (Divyastra Mk3) loitering munition-ஐ Kawa UAV Pvt. Ltd. நிறுவனம் வெற்றிகரமாக வானில் பறக்கவிட்டதாக தெரிவித்துள்ளது.

இலக்கைத் தேடி, குறிப்பிட்ட பகுதியில் சுற்றித் திரிந்து, துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட loitering munition வகையைச் சேர்ந்த இந்த அமைப்பு, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஜெட் பவர் மூலம் இயங்கும் துல்லியத் தாக்குதல் அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கியிருப்பது பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Loitering munition

இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் கூறுகையில், 'இது வெறும் சோதனை விமானப் பயணம் அல்ல; எங்களின் நோக்கத்தை வெளிப்படுத்தும் அறிவிப்பு. இந்தியா தனது சொந்த எல்லைகளுக்குள், ஜெட் என்ஜின் மூலம் இயங்கும் துல்லியத் தாக்குதல் அமைப்பை சிந்தித்து, வடிவமைத்து, பொறியியல் முறையில் உருவாக்கி, வெற்றிகரமாக பறக்கவிடும் திறனை மிகப்பெரிய அளவிலும், வேகமாகவும் நிரூபித்துள்ளது' என்றனர்.

மேலும், 'திவ்யாஸ்திரா Mk3 என்பது ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டம் செயல்பாட்டில் இருப்பதற்கான எடுத்துக்காட்டு' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டிலேயே மேம்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் துல்லியத் தாக்குதல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், திவ்யாஸ்திரா Mk3-ன் இந்த சோதனை இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.