திக்விஜய் சிங், சிந்தியா, கமல்நாத் எக்ஸ் தளம்
இந்தியா

ம.பி. | சிந்தியா வெளியேறிய விவகாரம்.. காங்கிரஸ் Ex முதல்வர்கள் மோதல்!

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் கலகம் வெடித்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் திக்விஜய சிங் மற்றும் கமல்நாத் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியுள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியாவின் பாஜகவில் சேர்வுக்கு கமல்நாத் காரணம் என திக்விஜய சிங் குற்றஞ்சாட்ட, கமல்நாத் அதை மறுத்து, சிந்தியாவின் தனிப்பட்ட ஆசையே காரணம் எனத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், அம்மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கலகம் வெடித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர்களான திக்விஜய சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர், ஒருவரையொருவர் சாடியுள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸைவிட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்ததற்கு கமல்நாத்தே காரணம். அன்றைய காலகட்டத்தில் கமல்நாத், நிர்வாகிகள் நியமனம், ஜோதிராதித்யாவின் சில கோரிக்கைகளை ஏற்காததாலயே அவர் கட்சி மாறினார். பரஸ்பர அறிமுகம் மூலம் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்த போதிலும் குவாலியர்-சம்பல் பகுதி குறித்த சில கோரிக்கைகளை சிந்தியாவும், தானும் இணைந்து கமல்நாத்திடம் கொடுத்ததாகவும், ஆனால் அது நிறைவேற்றப்படாமல் போனதாகவும் திக்விஜய சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.

திக்விஜய் சிங்

இவ்விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத், “ஜோதிராதித்யா சிந்தியா பாரதிய ஜனதாவில் இணைந்ததற்கு அவரின் தனிப்பட்ட ஆசையே காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”அன்றைய காலகட்டத்தில் திக்விஜய சிங் அரசாங்கத்தை வழிநடத்துவதாக அவர் உணர்ந்ததும்தான் கட்சியின் பிளவுக்குக் காரணம். பழைய விஷயங்களைத் தோண்டி எடுப்பதில் எந்தப் பயனும் இல்லை" எனத் தெரிவித்தார்.

அதேபோல், திக்விஜய சிங்கின் கருத்துகள் தொடர்பாக பேசிய சிந்தியா, “அது, கடந்த கால விஷயம். நான் கடந்த காலத்தைப் பற்றிப் பேசமாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கமல்நாத்

இதுதொடர்பாக பாஜக அமைச்சர் விஸ்வாஸ் சாரங், ”கமல்நாத்தை திரைக்குப் பின்னால் இருந்து அரசாங்கத்தை நடத்துபவர் யார் என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும். சிந்தியாவுக்கு தனிப்பட்ட லட்சியம் இல்லை. அதிகாரத்திற்காக பேரம் பேசாமல் பாஜகவில் சேர்ந்தவர் அவர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா, “சிந்தியாவின் அதிகப்படியான லட்சியம் மற்றும் அதிகாரத்திற்கான பசி காரணமாக மட்டுமே அரசாங்கம் வீழ்ந்தது” எனப் பதிலளித்தார்.