மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொஞ்சகொஞ்சமாய் உடைந்து வரும் சூழலில், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மக்களவைக்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு, யூசுப் பதானின் எம்பி தொகுதியை குறிவைத்திருப்பதாகவும், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் உதவியை திரிணாமுல் காங்கிரஸ் நாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப் பூசலும் வெடித்து வருகிறது. மம்தாவுக்கு எதிராக பல எம்எல்ஏக்களும் எம்பிக்களுமே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 58 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இது, மம்தாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 41 எம்பிக்களில் குறைந்தது 22 பேர் அக்கட்சியின் அதிருப்தியில் உள்ள பராசத் எம்பியான ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் பிரிந்து செல்லக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, மம்தாவுக்கு மேலும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், அக்கட்சி மற்றும் அவருடைய எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி மக்களவைக்குள் நுழைய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கட்சியில் நிலவும் அடுத்தடுத்த அதிர்வுகளால், மம்தா பானர்ஜி மக்களவைக்குள் நுழையக் கூடும் என அம்மாநில நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அவர் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹராம்பூர் தொகுதியைக் குறிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகுதியின் எம்பியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் உள்ளார். இவர், கடந்த 2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸின் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரியை தோற்கடித்திருந்தார். இந்தச் சூழலில்தான் மம்தா இந்த தொகுதியைக் குறிவைத்திருப்பதற்கு முக்கியக் காரணம், பஹராம்பூரில் முஸ்லிம்கள் வாக்கு வங்கி பெரும்பான்மையாக இருப்பதுதான். மேலும் இந்த தொகுதி மம்தாவுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸும் கருதுகிறது.
இதையடுத்து, அந்த தொகுதியில் மம்தா போட்டியிடுவதற்காக, யூசுப் பதானை பதவி விலகல் செய்ய வலியுறுத்தி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியை, திரிணாமுல் காங்கிரஸ் நாடியதாகவும், பின்னர் அந்த முடிவை யூசுப் பதான் நிராகரித்ததாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்தி, மேற்கு வங்காளத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சவுரவ் கங்குலி இதற்கு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், ’தாம் ஒருபோதும் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டதில்லை’ என்று தெளிவுபடுத்தியதோடு, ’இதுபோன்ற பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு ஊடக நிறுவனங்கள் உண்மைகளைச் சரிபார்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், யூசுப் பதானுக்கு தனது செய்தியைத் தெரிவிக்குமாறு மம்தா தன்னிடம் ஒருபோதும் கோரவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக பதானைத் தொடர்புகொள்ளவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவ்விவகாரம் மேற்கு வங்க அரசியலில் புயலை மட்டுமல்ல, சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.