மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சிறந்த தலைவர் என்று குறிப்பிட்டதாகக் கூறும் வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், "தூரத்தில் இருந்து பார்த்தபோது அவர் சிறியவர் என்று நான் நினைத்தேன். ஆனால் நெருங்கி வந்ததும், அவர் மிகவும் பெரியவர் என்பதை உணர்ந்தேன்" என அதில் கட்கரி சொல்கிறார். காங்கிரஸ் மற்றும் ராகுலை அவ்வப்போது கடுமையாக விமர்சிக்கும் பாஜக, தவிர அதே கட்சியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சரான நிதின் கட்கர், எப்படி அவரைப் புகழ்ந்திருப்பார் என கேள்விகள் எழுந்தன.
இதுதொடர்பாக, PTI Fact Checkஇல் இறங்கியது. அதன் விசாரணையில், அந்த வீடியோ பேச்சு தவறானது என கண்டறியப்பட்டுள்ளது. அசல் வீடியோவின் இரண்டு பகுதிகளை நெட்டிசன்கள் இணைத்து வெளியிட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உண்மையான வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.
'பிபிசி நியூஸ் இந்தி யூடியூப் சேனலில்' இந்த வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10, 2024 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில் தொகுப்பாளர் கட்கரியிடம், "ராகுல் காந்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்?" எனக் கேட்கிறார். அதற்கு கட்கரி, "நான் அனைவரையும் நேர்மறையாக பார்க்கிறேன்" என்று பதிலளிக்கிறார். தொடர்ந்து அவரிடம் ராகுல் பற்றி கேட்கப்படுகிறது. அதற்கு அவர், "இது அனைவரையும் பற்றிய எனது கருத்து. பல பேர் இருக்கிறார்கள், நான் பலரால் ஈர்க்கப்பட்டேன். டெல்லிக்கு வந்தபோது, கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள், பில் கேட்ஸ் போன்ற பல்வேறு வகையான மக்களை சந்தித்த அனுபவம் எனக்கு உள்ளது.
உலகெங்கிலும் உள்ளவர்களை நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், தூரத்திலிருந்து மிகவும் பெரியவர்கள் என்று நினைத்தவர்கள்கூட மிகச் சிறியவர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், தூரத்தில் இருந்து நான் சிறியவர்கள் என்று நினைத்தவர்கள்கூட, மிகப் பெரியவர்களாக மாறியுள்ளனர்” எனக் கூறுகிறார்.
இந்த வீடியோவை, கட்கரி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதாவது, கட்கரி தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பற்றிப் பேசியபோது ராகுலைக் குறிப்பிடவில்லை. ஆனால், நெட்டிசன்கள் ராகுல் பற்றிய முதல் கேள்விக்கு கட்கரி பதில் சொல்வதாக, அவருடைய இரண்டாவது பின் பகுதியை (சொந்த அனுபவ கருத்தை) இணைத்துவிட்டுள்ளனர். ஆகையால், இது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.