indian flights x page
இந்தியா

இண்டிகோ சேவை ரத்து | ‘வசூல் செஞ்சது எவ்வளவு?’ - விமான நிறுவனங்களிடம் கணக்கு கேட்கும் DGCA!

விமானச் சேவைக்காக டிசம்பர் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட சராசரி கட்டண விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.

Prakash J

விமானச் சேவைக்காக டிசம்பர் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட சராசரி கட்டண விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA)உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச சிவில் விமான அமைப்பினுடைய பரிந்துரைகளின் தொடர்ச்சியாக, இந்திய அரசு தன்னுடைய விதிகளை சமீபத்தில் புதுப்பித்தது. அதன்படி, விமானிகளின் நலனையும் பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் கொண்டு, விமானிகளுக்கான பணி நேரத்தைக் குறைத்து புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், இந்தப் புதிய விதிகளை அமல்படுத்துதல் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் சரியான திட்டமிடலின்மை போன்றவை காரணமாக 4,500 மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் கடந்த ஆண்டு இறுதியில் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இண்டிகோவின் 10% சதவீத விமான சேவைகளைக் குறைக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

indians flights

அதேநேரத்தில், இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை மிகப் பெருமளவில் உயர்த்தின. அப்போது மற்ற நிறுவனங்கள் கட்டணங்களை ஐம்பதாயிரம் வரை உயர்த்தியதாகப் புகார்கள் எழுந்தன. இது, பயணிகளை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது.

ஒருகட்டத்தில், இந்த விவகாரம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், மத்திய அரசு தலையிட்டு கட்டணங்களை நிர்ணயித்தது. அதன்படி, பயணத் தூரம் 500 கிலோ மீட்டர் வரை இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 7,500 ரூபாயாகவும், பயணத் தூரம் 500 முதல் 1,000 கிலோ மீட்டர் வரை இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 12,000 ரூபாயாகவும், பயணத் தூரம் 1,000 முதல் 1,500 கிலோமீட்டர் வரை இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 15,000 ரூபாயாகவும், பயணத் தூரம் 1,500 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால் அதிகபட்சக் கட்டணம் 18,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

indian flights

மேலும், இந்த உத்தரவு, நிலைமை சீராகும் வரை அமலில் இருக்கும் என்றும், அனைத்து விமான நிறுவனங்களும் இந்தக் கட்டண வரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. தற்போது நிலைமை சீராகியுள்ள நிலையில், விமானச் சேவைக்காக டிசம்பர் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட சராசரி கட்டண விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA)உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்டும் வகையில், இண்டிகோ நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.