இண்டிகோ விமானம் pt
இந்தியா

ஒரே மாதத்தில் 1,232 விமானங்கள் ரத்து.. தொடர்ந்து பாதிக்கப்படும் பயணிகள்.. சிக்கலில் இண்டிகோ!

நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக இண்டிகோவின் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனம் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

Prakash J

நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக இண்டிகோவின் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்நிறுவனம் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. தினசரி சுமார் 2,300 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கும் இண்டிகோ விமான நிறுவனம், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நகரங்களிலும் தனது விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது. இண்டிகோ சேவைகள் ரத்து காரணமாக பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், சூரத், கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்டகால பணியாளர் பற்றாக்குறை காரணமாக, விமான நிறுவனம் பல்வேறு விமான நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது மற்றும் பல விமானங்களை தாமதப்படுத்தியது.

இண்டிகோ விமானம்

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டதுடன், இதன் காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் விமர்சனத்திற்கும் ஆளானது. FDTL (விமான கடமை நேர வரம்புகள்) விதிமுறைகளின் இரண்டாம்கட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து இண்டிகோ கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது விமான நிலையங்கள் முழுவதும் அதன் செயல்பாடுகளில் ரத்து மற்றும் பெரும் தாமதங்களுக்கு வழிவகுக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக இவ்விமானத்தின் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது, இன்றும் தொடர்வதாகவும் நாளையும் தொடர வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் இதைச் சரிகட்டும் பணிகளில் விமான நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, இந்தப் பிரச்னைகளுக்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது.

இதற்கிடையே, விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோவின் விமான இடையூறுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், தற்போதைய நிலைமை மற்றும் சிக்கலைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விமான நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

indigo

நவம்பர் மாதம் முழுவதும் இண்டிகோ நிறுவனம் மொத்தம் 1,232 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. ரத்தான 1,232 விமானங்களில், 755 விமானங்கள் பணியாளர்கள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. தவிர, மோசமான வானிலை, விமானப் போக்குவரத்து அமைப்பில் அதிகரித்த நெரிசல் மற்றும் விமான நிலையக் கட்டுப்பாடுகள். தொழில்நுட்பப் பிரச்னைகள், விமானப் பணியாளர்களின் பணி நேர வரம்பு விதிகள் தொடர்பான புதிய சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் நவம்பர் மாதத்தில் மட்டும் 1,232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.