செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி உள்ளது. பூஜை காலம் துவங்கியதில் இருந்து பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து தினமும் முன்பதிவு மூலம் 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சராசரியாக 80 ஆயிரத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்கள் பெய்த தொடர் மழை ஓய்விற்குப் பின் இயல்பான காலநிலையாலும் விடுமுறை தினம் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழ் மாதத்தின் "மார்கழி" மற்றும் மலையாள மாதத்தின் "தனு" மாதப்பிறப்பு தினமான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது.
மாலை நேரத்தில், பெரிய நடைபந்தலிலும், கொடி மரத்தை சுற்றிலும், பதினெட்டாம் படி ஏறுவது என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளத்தில் திணறியது சபரிமலை. இருப்பினும், 18ம் படியில் பக்தர்களை ஏற்றி விடுவதிலும் கருவறை முன் தரிசனத்திலும் வேகம் கூட்டப்படுவதால், பக்தர்கள் பலமணி நேர காத்திருப்பின்றியும், கூட்ட நெரிசலின்றியும் சுப தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் துவங்கி, நெரிசலற்ற சுமுகமான சுப தரிசனத்திற்கான பணிகளை திருவிதாங்கோ தேவஸ்வம் போர்டு முடுக்கிவிட்டுள்ளது.