டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் 1996 முதல் 2025 வரை டெல்லியில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு தாக்குதல்களை நினைவூட்டுகிறது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே மாலை 6 மணியளவில் HR26 CE 7674 என்ற பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை ஹூண்டாய் i20 ரக கார் வெடித்து சிதறியது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தைச் சுற்றி இருந்த 10க்கும் மேற்பட்ட கார்களும் தீப்பற்றி எரிந்தன.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 CAT ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 6.52 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த நிலையில், அதனால் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வர இரவு 7:29 மணிவரை ஆனதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதற்குமுன்பு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பங்களை இந்த கார் வெடிப்பு நினைவூட்டுகிறது.. 1996 முதல் டெல்லியில் அரங்கேறிய வெடிப்பு சம்பவங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..
1996 -ஆம் ஆண்டு லஜபத் நகர் பகுதியில் ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிக் பிரண்ட் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
2000 -ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டைபகுதியில் லஷ்கர் இ தொய்பாதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3பேர் உயிரிழந்தனர்.
2001 -ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர்உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 5 பேர்கொல்லப்பட்டனர்.
2005 -ஆம் ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று சரோஜினி நகர், பஹார்கஞ்ச், கோவிந்தபுரி உள்ளிட்ட கூட்டம் நிறைந்த பகுதிகளில் மூன்று வெடிகுண்டுகள் ஒரேநேரத்தில் வெடித்தன. இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2008 -ஆம்ஆண்டு கரோல் பார்க், கிரேட்டர் கைலாஷ் மற்றும் கன்னாட் பிளேஸ் போன்ற பிரபலமான சந்தைகளில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஐந்துதொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியது. இதில் 30-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2011 -ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற வாயிலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
2025 - நேற்று நடைபெற்ற கார்வெடிப்பு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்.. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா இல்லை எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை..