ஷீஷ் மஹால் x page
இந்தியா

டெல்லி | அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியிருந்த 'ஷீஷ் மஹால்'.. அரசு விருந்தினர் மாளிகையாக மாற்ற திட்டம்!

பங்களாவின் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சொகுசு வேலைப்பாடுகள் காரணமாக, பாஜக அதனை 'ஷீஷ் மஹால்' (கண்ணாடி மாளிகை) என வர்ணித்தது.

Prakash J

டெல்லியில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்திய அரசு இல்லம், விரைவில் அரசு விருந்தினர் மாளிகையாக மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இருந்தபோது வசித்த அதிகாரப்பூர்வ பங்களா, அதன் புனரமைப்பு மற்றும் ஆடம்பர வசதிகள் காரணமாக பேசுபொருளானது. டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில், சுமார் 20,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அரசு பங்களா அமைந்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த பங்களாவில், டெல்லியில் முதல்வராக இருந்த சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்து வந்தார். அப்போது, இந்த பங்களாவை புனரமைப்பதற்கும், புதிய நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்கும் விதிகளுக்குப் புறம்பாகப் கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவிடப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது. இதற்காக சுமார் 33 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பங்களாவின் நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சொகுசு வேலைப்பாடுகள் காரணமாக, பாஜக அதனை 'ஷீஷ் மஹால்' (கண்ணாடி மாளிகை) என வர்ணித்தது. குறிப்பாக, டெல்லி சட்டசபைத் தேர்தலில் இந்த பங்களாவை விமர்சித்து பாஜக பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்த பங்களாவில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா அளித்த புகாரின் பேரில், மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அந்த பங்களாவை அரசு விருந்தினர் மாளிகையாக மாற்ற டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில், வாகன நிறுத்துமிடம், காத்திருப்பு அறை மற்றும் ஓர் அரசு விருந்தினர் மாளிகைக்குத் தேவையான பிற வசதிகளை மேம்படுத்துவதும் அடங்கும். இது உயர் அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மற்ற அரசு வசதிகளைப் போலவே இந்த விருந்தினர் மாளிகையும் செயல்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வருகை தரும் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குத் தங்குமிட வசதி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னொருபுறம், அந்த பங்களாவில் ஆளில்லாமல் இருந்தாலும், சுமார் 10 பணியாளர்கள் தினசரி பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.