Building collapse  AI
இந்தியா

சீட்டுக்கட்டு போல சரிந்த கட்டடம்.. உள்ளே சிக்கிக்கொண்ட உயிர்கள்.. மீட்புப் பணி தீவிரம்!!

இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்த நிலையில், சில மாணவர்கள் தங்களது செல்போன்கள் மூலம் வெளியே இருப்பவர்களை தொடர்புகொள்ள முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழக தெற்கு வளாகம் அருகே உள்ள ஆறு மாடிக் கட்டடம் மதியம் திடீரென இடிந்து விழுந்தது. மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 12 தீயணைப்பு வாகனங்கள், போலீஸ், மருத்துவக் குழு, தேசிய பேரிடர் படை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியோரின் எண்ணிக்கை தெளிவாகவில்லை; சிலர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தகவல்.

டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் உள்ள ஒரு ஆறு மாடிக் கட்டடம் ஒன்று இன்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் ஏராளமான மாணவர்கள், விடுதிகள், வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். இந்தச்சூழலில் தான், இந்தக் கட்டடம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்ததும், பிற்பகல் 1.33 மணியளவில் டெல்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முதலில் 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. பின்னர் நிலைமையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு குறைந்தது 12 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. போலீசார், மருத்துவக் குழுவினர், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

Building collapse

இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்த நிலையில், சில மாணவர்கள் தங்களது செல்போன்கள் மூலம் வெளியே இருப்பவர்களை தொடர்புகொள்ள முயன்றதாக சம்பவ இடத்தில் இருந்த டெல்லி பாஜக எம்எல்ஏ அனில் சர்மா தெரிவித்தார். இதனால் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பவர்களை மீட்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Building collapse

விபத்து நடந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பணிகளுக்கும் கட்டடம் இடிந்ததற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கவலை தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் (Ashish Sood) தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்குள் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், கட்டடம் இடிந்ததற்கான காரணம் என்ன, மீட்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இந்நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.