இஸ்ரோவில் தனியார்மயம்.? எதிர்காலம் என்னவாகும் ஊழியர்கள் கவலை!!
தனியார் விண்வெளித் துறை அமைப்பான IN-SPACe-இன் தலைவர் பவன் கோயங்கா, எதிர்காலத்தில் ராக்கெட்டுகளையும், செயற்கைக் கோள்களையும் தயாரிக்கும் பணியிலிருந்து இஸ்ரோ விலகிக்கொள்ளும் என்றும், அந்தப் பணிகளைத் தனியார் துறையே மேற்கொள்ளும் எனவும் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பவன் கோயங்காவின் இந்த கருத்துக்கு, இஸ்ரோ ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ராக்கெட் தயாரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்து, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு ஊழியர்கள் கடிதம் எழுதி உள்ளனர். இஸ்ரோ மையத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள இந்த கடிதத்தில், இஸ்ரோவின் எதிர்கால திட்டம் குறித்து எழுத்துப்பூர்வமாக பதிலளிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். எந்தவொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டாலும், ஊழியர்களிடம் அதுகுறித்து கருத்து பெறப்படுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். தங்களின் எதிர்காலம் மற்றும் பணிப் பாதுகாப்பு குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

