டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமீர் ரஷித் அலி பேசிய வீடியோவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை சிக்னல் அருகே ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்ட காரிலிருந்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த விபத்து தொடர்பாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அதில் முதல் முறையாக இந்த குண்டுவெடிப்பை, தற்கொலை படைத் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷித் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு நபர்களை (டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா) NIA விடுவித்துள்ளது. விசாரணையில் முக்கிய நபரான டாக்டர் உமர் நபியுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்கொலை தாக்குதல் தொடர்பாக அமீர் ரஷித் அலி பேசிய வீடியோவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இந்தியா டுடே ஊடகத்தில், அவர் பேசியுள்ளதாகக் கூறப்படும் வீடியோவில், “தற்கொலை குண்டுவெடிப்புக்கு எதிராக பல வாதங்களும் முரண்பாடுகளும் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், தற்கொலை குண்டுவெடிப்பு என்பது இஸ்லாத்தில் ஒரு தியாக நடவடிக்கை ஆகும். ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் இறந்துவிடுவார் என்று கருதி, இயற்கையான மரண அனுமானத்திற்கு எதிராகச் செயல்படுவது தியாக நடவடிக்கை ஆகும்”என அதில் குறிப்பிடுகிறார். ஃபரிதாபாத் பயங்கரவாதக் குழுவின் மிகவும் தீவிரவாத உறுப்பினரான உமர் அலி, தனிநபர்களை மூளைச் சலவை செய்வதற்காக இந்த வீடியோவை உருவாக்கியதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.