புதுடெல்லியைச் சேர்ந்தவர் சீமா. இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக திருமணம் என்ற பெயரில், மனைவியை இழந்தவர் மற்றும் விவாகரத்து ஆனவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். முதலில் திருமணம் செய்துக்கொண்டு பிறகு அவர்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, திருமணத்தை முறித்துக்கொண்டு, மேலும் அவர்களிடமிருந்து ஜீவனாம்சம் என்ற பெயரில் பணத்தை பறித்து வருவதையே தொழிலாகக்கொண்டு இருக்கிறார். இவரை டெல்லி காவல்துறையினர் "லூட்டரி துல்ஹான்" அதாவது தமிழில் கொள்ளையடிக்கும் மணப்பெண் என்ற பெயரில் அழைத்து வருகின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த சீமா முதன் முதலில் 2013ல் ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். பின் சில வருடங்களில் அவரின் குடும்பத்தினரின் மேல் பல வழக்குகளைப் பதிவு செய்து விவாகரத்துப் பெற்று, ஜீவனாம்சம் என்ற பெயரில் ரூ. 75 லட்சத்தை பெற்றுள்ளார்.
அதன் பிறகு 2017ல் டெல்லியை அடுத்த குருகிராம் என்ற ஊரில் ஒரு மென்பொருள் பொறியாளாரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். சில வருடங்களில் அவரிடமிருந்து பிரிந்து 10 லட்சத்தை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார்.
அதன் பிறகு மீண்டும் 2023ல் ஜெய்ப்பூரைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சில மாதங்களில் அவர்களின் வீட்டிலிருந்து 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் வெளியேறியுள்ளார். இதை அடுத்து தொழிலதிபரின் குடும்பத்தினர் சீமாவின் மீது வழக்குப்பதிவு செய்ததின் விளைவாக தற்பொழுது சீமாவின் மோசடிகள் வெளியே தெரியவந்துள்ளது.
திருமணச் சட்டத்தில் பெண்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டங்களைப் பயன்படுத்தி இது வரை திருமணம் என்ற பெயரில் பலரை ஏமாற்றி அவர்களிடமிருந்து ஜீவனாம்சம் என்ற பெயரில் சுமார் 1.25 லட்சத்தை சுருட்டியப்பெண்ணை போலிசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.