கை மாற்று அறுவை சிகிச்சை
கை மாற்று அறுவை சிகிச்சை ட்விட்டர்
இந்தியா

டெல்லி: விபத்தில் கைகளை இழந்தவருக்கு மீண்டும் கைகளைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

Jayashree A

வேதனைக்குள் ஒரு சாதனையையும், சோகத்திற்குள் ஒரு சந்தோஷத்தையையும் பார்க்கலாம் என்ற சொல்லுக்கு உதாரணமாக, டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பெயிண்டர் ஒருவர் அவரது மூலதனமான தனது இரு கைகளையும், 2020 ல் நடந்த ரயில் விபத்து ஒன்றில் இழந்துள்ளார். அதன் பிறகு அவரது வாழ்க்கை வெறுமையாகி உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருக்கும் பள்ளி ஒன்றின் முன்னாள் நிர்வாக தலைவரான மீனா மேத்தா என்பவர் விபத்து ஒன்றில் மூளை சாவு அடைந்துள்ளார். இவர் தனது இறப்பிற்கு பிறகு உடல் உறுப்புகள் தானம் கொடுக்க ஏற்கெனவே சம்மதித்திருந்ததால், உறவினர்களின் அனுமதியுடன் இவரது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கருவிழிகள் ஆகியவை வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டது. அதேபோல் மீனா மேத்தாவின் இரு கைகள் அகற்றப்பட்டு, விபத்தில் கைகளை இழந்த பெயிண்டருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

உடல்மாற்று அறுவைசிகிச்சை என்பது அசாதாரணமான நிகழ்வு, இதற்கு மருத்துவர்கள் குழு கடின உழைப்பை மேற்கொள்ளவேண்டும், தவிர 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த அறுவை சிகிச்சையில் நன்கொடையாளரின் கைகளுக்கும் பெறுநரின் கைகளுக்கும் இடையே உள்ள தமனி, தசை, தசை நார், மற்றும் நரம்பை இணைக்கும் பணியானது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம். இதில் வெற்றி பெற்ற சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மீண்டும் பெயிண்டரின் கைகள் பிரஷ் பிடித்து படம் வரைவதற்கு உதவி செய்து அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளனர்.

இது போல் தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றில் திண்டுக்கல்லை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான நாராயணசாமி என்பவர் விபத்து ஒன்றில் இருகைகளையும் இழந்தார்.

நாராயணசாமி

அவர் வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவர்கள் நாராயணசாமிக்கு கைமாற்று அறுவைசிகிச்சையின் மூலம் மாற்று கைகளை பொருத்தி சாதனை படைத்தனர். அதன்பிறகு நாராயணசாமி மீண்டும் தனது கட்டுமான தொழிலில் ஈடுபட்டதுடன், கடந்தவருடம் திருமணம் செய்துகொண்டு கரம்பிடித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் நாராயணசாமிக்கு இந்த சிகிச்சையை செய்தது அரசு மருத்துவமனை என்பதால் முற்றிலும் இலவசமாக சிகிச்சை செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் ரமாதேவிதான், நாராயணசாமியின் திருமணத்தை முன்னின்று நடத்திவைத்தார்.