இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், மொழிகள்வாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, அவ்வப்போது மொழிப் பிரச்னைகள் ஏற்படுவதுடன் அம்மாநிலங்களில் வசிப்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணமாக கர்நாடகா விளங்குகிறது. அவ்வப்போது மொழிப் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறது.
சமீபத்தில்கூட, ஐபிஎல் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம், கன்னட மொழியில் சமூக வலைத்தளத்தைத் தொடங்கியிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இது தவிர, அவ்வபோது கன்னட மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்தி மற்றும் பிறமொழி பேசும் நபர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த கார்ஸ்24 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் சோப்ரா, கன்னடம் பேசத் தெரியாவிட்டால் டெல்லிக்கே திரும்பி வருமாறு பதிவு ஒன்றைப் பகிர்ந்திருப்பது இணையத்தில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இதுதொடர்பாக, பொறியியல் பணிகளுக்கான விண்ணப்பங்கள் குறித்த சமூக ஊடகப் பதிவில், சோப்ரா, "பெங்களூருவில் பல வருடங்கள் கழித்து இன்னும் கன்னடம் பேச முடியவில்லையா? பரவாயில்லை. ஆ ஜாவோ டெல்லி (டெல்லிக்கு வாருங்கள்)" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அவரது பதிவில், "டெல்லி என்சிஆர் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. அது உண்மையில் உள்ளது" என்று சோப்ரா கூறினார். சோப்ராவின் கூற்றுப்படி, அவரது நிறுவனம் வீட்டிற்கு அருகில் இருக்க விரும்பும் கிக்காஸ் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது எனத் தெரிகிறது.
இதற்கிடையே வைரலான இந்தப் பதிவுக்கு பலரும் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். பயனர் ஒருவர், “பெங்களூருவைவிட டெல்லி என்சிஆர் சிறந்ததாக இருக்கும். ஆனால் அதன் ஒரு அம்சத்தை நிரூபிக்கவும். அப்படிச் சொன்னால், நான் உங்களுக்காக 1 வருடம் இலவசமாக வேலை செய்வேன்” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “பணியமர்த்தல் அழைப்பில் நீங்கள் இடுகையிட விரும்பும் செய்தி இதுவல்ல. எனவே உங்கள் குழுவில் வட இந்தியர்கள்/டெல்லிவாசிகள் இருக்க வேண்டுமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பலர் டெல்லியின் சுற்றுச்சூழல் தன்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். ”இதனால் அது வாழ்வதற்கு உகந்த இடமாக இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலரோ, விக்ரம் சோப்ரா, தனது இடுகையை வைரலாக்கவே இப்படி மொழி விவாதத்தில் மூழ்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக ஒரு பயனர், “பெங்களூருவைவிட்டு யாரும் செல்ல விரும்பவில்லை. இதுதான் நிஜம். மேலும், கன்னடத்தை யாரும் கற்றுக்கொள்ள வற்புறுத்த மாட்டார்கள். நீங்களும் கற்றுக்கொண்டால் உங்களுக்கு நல்லது. நான் கர்நாடகாவைச் சேர்ந்தவன். ஆனால் நான் புனேவில் வாழ்கிறேன். புனேவில் நான் மராத்தி கற்றுக்கொண்டேன், ஏனென்றால் அங்கு புதியவர்களுடன் தொடர்புகொள்வது இந்தி அல்லது ஆங்கிலம் சிறப்பாக இருக்காது” எனத் தெர்வித்துள்ளார்.
முன்னதாக, சராசரியாக 500 காற்றின் தரக் குறியீடு (AQI) கொண்ட நச்சுப்புகை மூட்டத்தால் டெல்லி சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் சமூக ஊடகங்களில் கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூருவாசிகள் டெல்லி மாசுபாட்டை கேலி செய்யும் மீம்ஸ்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். "கன்னடம் கற்று நிரந்தரமாக பெங்களூருவில் குடியேற வேண்டிய நேரம் இது" என பயனர் ஒருவர் நகைச்சுவையாகத் தெரிவித்ததன் விளைவாகவே இந்த மோதல் வெடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரம், ஒரு காலத்தில் தூங்கும் நகரமாக இருந்தது. இது பலரின் ஓய்வு இல்லமாகக்கூடக் கருதப்பட்டது. ஆனால் இன்று, இது ஒரு பரபரப்பான தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளது. எல்லா வகையிலும், இது இப்போது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள திறமைசாலிகள் கார்டன் சிட்டியின் நகரில் வந்து இறங்குகிறார்கள். இதன்காரணமாகவே, அவர்கள் கன்னடம் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள்.