delhi car blast afp
இந்தியா

டெல்லி கார் வெடிப்பு | அமித் ஷா நேரில் ஆய்வு.. உஷார் நிலையில் பல நகரங்கள்!

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடி விபத்தை மத்திய உள்துறை அமித் ஷா நேரில் பார்வையிட்டு, ஆலோசனை மேற்கொண்டார்.

Prakash J

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடி விபத்தை மத்திய உள்துறை அமித் ஷா நேரில் பார்வையிட்டு, ஆலோசனை மேற்கொண்டார்.

டெல்லி செங்கோட்டை லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே இருந்த சிக்னலில், இன்று இரவு 6.52 மணிக்கு கார் ஒன்று மெதுவாய் ஊர்ந்து சென்றபோது வெடித்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தால் அருகிலிருந்து 6 கார்களும் 2 இ-ரிக்‌ஷாக்களும் 1 ஆட்டோ ரிக்‌ஷாவும் எரிந்து நாசமாயின. இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர், மேலும் வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல் குழுக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றன. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்றும் ஆய்வு நடத்தினார். இதற்கிடையே, உயிரிழந்த குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

delhi car blast

மறுபுறம், டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கியமான பகுதிகளில் ரோந்து மற்றும் சோதனைகளை அதிகரிக்க லக்னோவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் தவிர கேரளா, பீகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டேராடூன் உள்ளிட்ட பல நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.