டெல்லி முன்னாள் முதலமைச்சர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் களமிறங்கி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். போட்டியிட்ட முதல் தேர்தலிலே வெற்றி பெற்ற பர்வேஷ் வர்மாவிற்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை கண்ட பாஜக தலைமை 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று சட்டமன்ற கதவுகளை திறந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களம் கண்ட பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் வேட்பாளர் மஹாபால் மிஸ்ராவைவிட சுமார் 5 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இது டெல்லி மக்களவைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் என்ற சாதனையாக மாறியது.
47 வயதான பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர், ஊரக வளர்ச்சித்துறை கூட்டுக்குழு உறுப்பினர், டெல்லி பாஜக தேர்தல் கமிட்டி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். நடப்பு சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து, புதுடெல்லி தொகுதியில் பர்வேஷ் வர்மாவை பாஜக களமிறங்கியுள்ளது.
சிறுபான்மையினர் தொடர்பான சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பர்வேஷ் வர்மா, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது சாஹின்பாக் கலவரம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இஸ்லாமியர்களை புறக்கணிக்க வேண்டுமென சமீபத்தில் நடந்த விஷ்வ இந்து பரிசத் கூட்டத்திலும் பேசியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய பந்தம் கொண்டிருந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, டெல்லி முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்க தகுதியான நபர் என பாஜக வட்டாரங்கள் கருதுகின்றன.