அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி | வலுக்கும் மும்முனைப் போட்டி.. அதிஷி, கெஜ்ரிவாலை எதிர்த்து களமிறக்கும் காங்கிரஸ், பாஜக!

டெல்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

Prakash J

தலைநகர் டெல்லி விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்கொள்ள இருப்பதையடுத்து, இப்போதே அதற்கான பணிகள் வேகம்பிடித்துள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் I-N-D-I-A கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்திருந்தன. ஆனால் அதேநேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவ்விரு கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. டெல்லியிலும் இதே பிரச்னை நீள்வதால், இங்கேயும் இந்த இருகட்சிகள் தனித்தனியாய்ப் போட்டியிட உள்ளன. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜகவின் முன்னாள் எம்பி பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா போட்டியிடுகிறார்.

அதேபோல், தற்போதைய முதல்வர் அதிஷியை எதிர்த்து பாஜக எம்பியாக இருந்த ரமேஷ் பிதுரி, கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா களமிறக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ள லம்பா, கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறி ஆம் ஆத்மியில் இணைந்தார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு கட்சிக்குள் அவமரியாதையை காரணம் காட்டி அவர் மீண்டும் காங்கிரசுக்கே திரும்பினார். கல்காஜி தொகுதி ஆம் ஆத்மிக்கு வலுவான கோட்டையாக இருந்து வருகிறது, 2020 தேர்தலில் அதிஷி 55,000 வாக்குகளைப் பெற்று இங்கு அமோக வெற்றியைப் பெற்றார்.

அதிஷி,

இந்நிலையில், இந்த முறை கல்காஜி தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி 2015ஆம் ஆண்டு முதல் தலைநகரில் ஆட்சியில் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் இரண்டு முறை பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால், மக்களவைத் தேர்தலில், 2014முதல் ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் 7 இடங்களிலும் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.