”ஆம் ஆத்மி கட்சி 'ஆப்தா' பேரிடராக டெல்லி மக்களுக்கு தீமை செய்கிறது” - பிரதமர் மோடி விமர்சனம்!
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் செயல்படும் ஆம் ஆத்மி கட்சி சுருக்கமாக 'ஆப்' என அழைக்கப்படும் நிலையில், டெல்லி மக்களுக்கு 'ஆப்தா' என அழைக்கப்படும் பேரிடராக தீமை செய்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார். அசோக் நகரில் குடிசைவாழ் மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 1675 அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த போது பிரதமர் மோடி இத்தகைய கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.
டெல்லியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களுக்கு 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு கிடைக்காமல் தடுத்துள்ளதாக குறிப்பிட்டார். டெல்லி மக்கள் பிற மாநிலங்களில் பயணம் செய்யும்போது ஏதேனும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் செலவின்றி கிடைக்கும் வகையில் மத்திய அரசின் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் அதை தில்லி மக்கள் பயன்படுத்த விடாமல் ஆம் ஆத்மி கட்சி முட்டுக்கட்டை போட்டுள்ளது எனவும் அவர் கடும் விமர்சனம் செய்தார்.
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கிய பிரதமர் மோடி, நான் எனக்காக வீடு கட்டிக் கொள்ளவில்லை என அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்தார். தனக்காக டெல்லி முதல்வராக இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் பல கோடி ரூபாய் செலவில் சொகுசு வீடு கட்டிக் கொண்டார் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியை கண்டனம் செய்தார். நான்கு கோடி மக்களுக்கு மத்திய அரசு வீடு கட்டி கொடுத்துள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அண்ணா ஹஜாரே போராட்டத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி ஊழலில் திளைத்து வருகிறது என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிடும் வகையில் பேசியுள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு உள்ளிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியின் ஊழல் வழக்குகளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, டெல்லிக்கு பெயரிடராக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி உள்ளது என குறிப்பிட்டார். யமுனை நதி மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசு தவறிவிட்டது எனவும் டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைப்பதற்கு கூட வழி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தீவிர போட்டி நடைபெறும் என கருதப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் பல்வேறு சிறிய கட்சிகள் களத்தில் இறங்கினாலும் கட்சிகள் களத்தில் இறங்கினாலும், முக்கிய போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பது மற்றும் அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கள்ள உள்ளார். பாஜக டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனையின் அடிப்படையில், டெல்லியில் பல புதிய சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மருந்துகளை 80% வரை குறைந்த விலையில் அளிக்கும் 500 "ஜன் அவ்ஷத் கேந்திரா" மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மோடி குறிப்பிட்டார். மோடியின் குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பத்து வருடங்களில் டெல்லிக்காக மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை என சாடினார். சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் நிலையில், அடுத்த சில வாரங்களில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி அதிரடியாக விமர்சனங்களையும் முன்வைத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.