முகேஷ் அஹ்லாவத் எக்ஸ் தளம்
இந்தியா

"நான் பழிவாங்கப்படலாம்; இறக்கக்கூடும்" பாஜகவில் சேர ரூ.15 கோடி; ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபரப்பு புகார்!

ஆம் ஆத்மியிலிருந்து விலகி, பாஜகவில் சேர அக்கட்சி வலியுறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்.8) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. என்றாலும் பாஜகவே இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கூறும் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆம் ஆத்மி

இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி சஞ்சய் சிங், ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்களை விலைக்கு வாங்க பாஜ முயற்சி செய்வதாகவும், இதற்காக ரூ.15 கோடி தர அக்கட்சி தயாராக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் வழிமொழிந்து வருகின்றனர்.

இதனிடையே, டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு பாஜ பொதுச் செயலர் விஷ்ணு மிட்டல் எழுதிய கடிதத்தில், கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மியிலிருந்து விலகி, பாஜகவில் சேர அக்கட்சி வலியுறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் சுல்தான்பூர் மஜ்ராவைச் சேர்ந்தவர் முகேஷ் அஹ்லாவத். இவர்தான் அந்தப் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுகுறித்து அவர், ”நேற்று இரவு தனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தால் ரூ.15 கோடியும், அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு, நான், ’நீங்கள் எவ்வளவு விலை கொடுத்தாலும் எனது தலைவரை விட மாட்டேன்’ எனப் பதிலளித்தேன். இதற்காக நான் பழிவாங்கப்படலாம். இறக்கக்கூடும். ஆனாலும் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் எனக்கு அளித்த மரியாதையை நான் இறக்கும் வரை மறக்க மாட்டேன். அதனால், அக்கட்சியை விட்டு நான் வெளியேற மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அஹ்லாவத்

முன்னதாக, ”பாஜக 55 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், அக்கட்சி எங்கள் வேட்பாளர்களை வேட்டையாட வேண்டிய அவசியம் என்ன? சில வேட்பாளர்களை வேட்டையாடும் ஒரே நோக்கத்துடன் இந்த போலி கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் எங்களில் ஒருவர்கூட சாய்ந்து விடமாட்டார்கள்" என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் பாஜக மறுத்துள்ளது. ’ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட உடனடி தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் விளைவு இது’ என அது தெரிவித்துள்ளது.