டெல்லி சட்டப்பேரவை தேர்தல் | ஓய்ந்தது பரப்புரை - மும்முனைப் போட்டியில் முந்தப்போவது யார்?
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்துள்ளது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில பாஜக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியினர் சுழன்றடித்து களப்பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
மூன்று கட்சியின் முக்கிய தலைவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டியதால், கடந்த சில வாரங்களாக அனல் பறந்த தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
யமுனா நதி மாசு விவகாரம், குடிநீர், அடிப்படை வசதிகள் ஆகியவை இந்த தேர்தலில் பேசுப் பொருளாக அமைந்துள்ளது. இதனை மையப்படுத்தியே அரசியல்கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
நாளை மறுநாள் பதிவாகும் வாக்குகள், 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனிடையே வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.