பீகார் தேர்தலில் போட்டியிடாத ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) தலைவர் உபேந்திர குஷ்வாஹாவின் மகன் தீபக் பிரகாஷ் நேற்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது பேசுபொருளாகி உள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அரியணையில் ஏறியுள்ளது. இதன் பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது. முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வர்களாக பாஜகவைச் சேர்ந்த இருவரும், அமைச்சர்களாக இன்னும் சிலரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
அந்த வகையில், தேர்தலில் போட்டியிடாத ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM) தலைவரின் உபேந்திர குஷ்வாஹாவின் மகன் தீபக் பிரகாஷ் நேற்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது பேசுபொருளாகி உள்ளது. இவருடைய தந்தை மாநிலங்களவை எம்பியாக இருக்கும் நிலையில், தாயார் ஸ்னேஹலதா குஷ்வாஹா நடைபெற்று முடிந்த சசாரம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாகி உள்ளார். கல்வி மற்றும் அனுபவத்தால் தொழில்நுட்ப வல்லுநரான தீபக் பிரகாஷ், நிதிஷ் குமாரின் பீகார் அமைச்சரவையில் எதிர்பாராத விதமாக நுழைந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆறு இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வகையில் ஓர் அமைச்சரையும் அது பெற்றது. அந்த அமைச்சருக்கான இடத்தை தீபக் பிரகாஷ் தற்போது பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற தீபக்கின் தாயாரான ஸ்னேஹலதா குஷ்வாஹாவுக்குத்தான் நிதிஷ் குமாரின் 10வது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில்தான் இந்த ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது.
உபேந்திர குஷ்வாஹா தனது மகன் அமைச்சராக வேண்டும் என்று விரும்புவதை நிதிஷ் குமாரோ அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ ஆதரிக்கவில்லை என்றும், தீபக்கின் பெயர் கடைசி நேரத்தில்தான் இறுதி செய்யப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் உபேந்திர குஷ்வாஹாவின் வாரிசு அரசியல் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. தீபக் பிரகாஷ் மட்டுமல்ல, ஹெச்ஏஎம் (எஸ்) தலைவர் ஜிதன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சுமனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சராகப் பதவியேற்றது குறித்து தீபக் பிரகாஷ், “நான் அரசியலுக்குப் புதியவன் அல்ல. நான் சிறுவயதிலிருந்தே அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன், என் தந்தையின் வேலையைப் பார்த்து வருகிறேன், கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறேன். அரசியலில் முடிந்தவரை சாதாரண மக்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். சாதாரண மக்கள் அரசியலுக்கு நெருக்கமாக இருக்கும்போது, ஜனநாயகம் வலுவடைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடாமல் தீபக் பிரகாஷ் அமைச்சராகப் பதவியேற்றிருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருந்தாலும், அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் சட்ட மேலவைக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதாகக் கூறப்படுகிறது. பீகாரிலும் குடும்ப அரசியல் கொடிகட்டிப் பறப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.