கர்நாடகா எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா|ஆதார் எண் மாற்றத்தால் வந்த ’இறப்புச் சான்றிதழ்’.. உயிரோடு இருப்பதை நிரூபிக்க போராடும் நபர்!

இறந்துபோனவரின் பெயரில் இறப்புச் சான்றிதழ் வழங்கியபோது உயிரோடு இருந்தவரின் ஆதார் எண்ணை கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தவறுதலாகப் பதிந்ததால், கர்நாடகாவில் முதியவர் ஒருவர் எந்த அரசுப் பலன்களையும் பெற முடியாமல் அனுபவித்து வருகிறார்.

Prakash J

கர்நாடக மாநிலம் பெலகாவி தாலுகாவில் உள்ள சவாகான் கிராமத்தைச் சேர்ந்தவர், 62 வயதான கணபதி கச்சு ககட்கர். இவர், உயிரோடு இருக்கும் நிலையில், அவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கியதால் அரசின் எந்தச் சலுகையையும் பெற முடியாமல் தவித்து வருகிறார்.

இவருடைய தாத்தாவான மசானு ஷட்டு ககட்கர், கடந்த 1976ஆம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது அவர் ஒன்பது ஏக்கர் நிலத்தை விட்டுச் சென்றுள்ளார். இதை அவரது மூன்று மகன்களும் பிரிக்கவில்லை. எனினும், அவர்கள் மூன்றுபேரும் இறந்துவிட்ட நிலையில், அவர்களுடைய எட்டு மகன்களும் அதாவது அந்த தாத்தாவின் பேரன்கள் இந்தச் சொத்தைப் பிரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக வருவாய் அலுவலகத்தை அணுகி, அதற்கான ஆவணங்களைத் தயார் செய்தனர்.

ஆதார் அட்டை

அதன்படி, இறந்துபோன தாத்தாவின் பெயரில் இறப்புச் சான்றிதழ் வழங்கும்போது, கணபதியின் ஆதார் எண்ணை, அந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தவறுதலாக பதிந்துள்ளார். இதனால், கணபதி இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டு அவருடைய ஆதார் எண், குடும்ப அட்டை உள்பட அனைத்தும் முடக்கப்பட்டது.

இந்த விவரம் தெரியாததாலேயே அவர், முதியோர் பணம் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பலன்களையும் பெற முடியவில்லை. இறுதியாக, சான்றிதழில் நடைபெற்ற தவறை, கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் கண்டுபிடித்துள்ளார்.

இருப்பினும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 6ஆம் தேதி வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருடன் சென்று துணை கமிஷனர் ரோஷனை அணுகினார். அவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்ததுடன், இதன்மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.