ed, arvind kejriwal, delhi hc
ed, arvind kejriwal, delhi hc twitter
இந்தியா

“கொல பண்ணிட்டு, தேர்தல்னு சொல்லுவீங்களா’ - கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை காரசார வாதம்!

Prakash J

திகார் சிறையில் டெல்லி முதல்வர்

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு மட்டும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்வருக்கு சிறப்பு உணவு, மருத்துவ உபகரணங்கள், குறிப்பிட்ட சில புத்தகங்கள் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை, ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ராகுலுடன் நடைப்பயணம்..நேற்று வரை காங். ஆதரவு; திடீரென பாஜகவில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்!

அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதம்

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 3) டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில், “இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவரிடம் வீட்டில் சென்று வாக்குமூலம் பெற எந்தவித அமலாக்கத் துறை முயற்சியும் எடுக்கவில்லை. வாக்குமூலம் பெற்ற பிறகே அவரை கைது செய்திருக்க வேண்டும். கெஜ்ரிவால் நாட்டைவிட்டு வெளியேற சாத்தியம் உள்ளதா? கடந்த ஒன்றரை ஆண்டில் கேஜ்ரிவால் சாட்சிகள் யாரையாவது மிரட்டி உள்ளாரா அல்லது விசாரணைக்குதான் மறுத்தாரா? அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கைது செய்துள்ளனர்.

Arvind Kejriwal

டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்குச் சவாலாக உள்ளது. இங்கு நடக்கவுள்ள தேர்தலில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவும் அவரை கைதுசெய்துள்ளனர். இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சியை உடைக்க முயற்சிக்கிறார்கள். தற்போது கெஜ்ரிவாலை கைதுசெய்ய வேண்டிய அவசரம் என்ன? முதல்கட்டத் தேர்தல் நடக்கும் முன்பாக ஆம்ஆத்மி கட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த அவசர கைது நடந்துள்ளது. தேர்தலுக்குமுன், பதவியில் இருக்கும் முதல்வரை கைதுசெய்தது தேவையற்றது” என வாதம் வைக்கப்பட்டது.

இதையும் படிக்க: தொடரும் பட்டியல்: கட்சி மாறிய 4வது எம்.பி.. உத்தவ்தாக்கரே கட்சியில் ஐக்கியம்.. பாஜகவுக்கு பின்னடைவு?

கெஜ்ரிவால் தரப்புக்கு பதிலளித்த அமலாக்கத் துறை

இதற்குப் பதிலளித்த அமலாக்கத் துறை, "தேர்தல் வந்தால் கைது செய்யக்கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டைக் கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு. போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்தால், அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? இந்த வழக்கின் முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்" எனத் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

ed

இதற்கிடையே டெல்லி அமைச்சர் அதிஷி, “கைது செய்யப்பட்டதிலிருந்து இப்போது வரை அரவிந்த் கெஜ்ரிவால் நான்கரை கிலோ எடை குறைந்துள்ளார். இது மிகவும் கவலை அளிக்கிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திகார் சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதையும் படிக்க: கானா நாட்டில் 12 வயது சிறுமியை மணந்த 63 வயது ஆன்மிகத் தலைவர்.. கடும் எதிர்ப்பால் நடந்த திருப்பம்!