திருமலா பால் நிறுவனத்தில் 45 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து பிடிபட்ட மேலாளர், தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி, 3 ஆண்டுகளாக சென்னை - ரெட்டேரியில் உள்ள, பிரபலமான, திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராக இருந்துள்ளார். இவர், 45 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது, நிறுவனத் தணிக்கையில் அம்பலமானது. இதையடுத்து, 5 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்த நவீன், மீதத்தை விரைவில் தருவதாகக் கூறியுள்ளார். எனினும் நிறுவன அதிகாரிகள், கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நவீன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக, தனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக, அவரது சகோதரி, மாதவரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் தேடிய காவல் துறையினர், பிரிட்டானியா நகரில் நவீன் வாங்கியிருந்த மனையில் உள்ள குடிசையில் தூக்கிட்ட நிலையில் அவரது உடலை கண்டறிந்தனர். உடலைக் கைப்பற்றி, கூராய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமணமாகாத நவீன், புழலில் 4 கிரவுண்ட் நிலமும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களையும் வாங்கியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.