உத்திரப் பிரதேசம்
உத்திரப் பிரதேசம் முகநூல்
இந்தியா

உ.பி - பாலியல் வன்கொடுமையால் 2 சிறுமிகள் பலி... புகாரளித்த தந்தையும் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!

ஜெனிட்டா ரோஸ்லின், நிவேதா ஜெகராஜா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14, 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் கடந்த 28 ஆம் தேதி காணாமல் போயுள்ளனர். நெடுநேரமாகியும் அவர்கள் வீடுதிரும்பாததால் அக்கம்பக்கத்தினர் அவர்களை தேடிச்சென்றுள்ளனர். மறுநாள் காலை (பிப்ரவரி 29) அச்சிறுமிகள், ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இது கொலையா தற்கொலையா என தெரியாத நிலையில் ஊர்மக்கள் இதுகுறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவர்கள் சிறுமிகளின் மரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அதில் அப்பகுதியில் இருந்த செங்கற்சூளையின் உரிமையாளரும், அவரின் உறவினர்களும்தான் சிறுமிகளின் மரணத்திற்கு காரணம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இரண்டு சிறுமிகளையும் வலுக்கட்டாயமாக மது அருந்தவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அதனை வீடியோவாக எடுத்து அவர்கள் சிறுமிகளை மிரட்டியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியும் உள்ளனர் என்று சிறுமியின் உறவினர்கள் காவல்துறையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய கான்ட்ராக்டர் ராம்ரூப் நிஷாத் (48), மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமை

இதுதொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கும் சுழலில், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தை அப்பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக நேற்று (மார்ச் 9) கண்டெடுக்கப்பட்டுள்ளார். வழக்கை திரும்ப பெற அவருக்கு தொந்தரவு கொடுத்தாக அவரின் மகன் தரப்பில் கூறப்படுகிறது.

சிறுமிகளின் மரணத்தை போலவே, இவரது மரணமும் கொலையா தற்கொலையா என்பது தற்போதுவரை உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து உ.பி காவல்துறை விசாரித்துவருகிறது. வழக்கமான பிரேத பரிசோதனைக்குப்பின், காவல்துறையினர் முன்னிலையில் அத்தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. தந்தை மற்றும் சகோதரியை இழந்த அந்த மகன், தந்தை மரணத்துக்கு நீதிகேட்டு மேலும் ஒரு புகாரை காவல்துறையில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி தன் எக்ஸ் தளத்தில்,

“இந்த ஆட்சியில் நீதி கேட்பதுகூட குற்றம். பாஜக ஆளும் மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரையும் எதிரிகளாகக் கருதுவது வழக்கமாகி வருகிறது.

பாஜக ஆட்சியில் ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், மந்த்சௌரிலிருந்து பவுரி வரையிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குப் பிறகு, அவர்களின் குடும்பங்கள் நீதிக்காக ஏங்குகின்றன. இந்த கொடூரமான அநீதிக்கு எதிராக உங்கள் (மக்கள்) குரலை உயர்த்துங்கள், இல்லையெனில் இன்றோ நாளையோ இந்தக் கொடுமையின் நெருப்பு உங்களையும் வந்தடையும்” என்றுள்ளார் காட்டமாக.