நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது உடனுக்குடன் மேலும் 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது என மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை அறிவித்தபோது, திமுகவின் தயாநிதிமாறன் சமஸ்கிருதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை உருவாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. கூடுதலாக உருது, மணிபுரி, போடோ, டோக்ரி, சமஸ்கிருதம் மற்றும் மைதிலி ஆகிய மொழிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுகின்றன என சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் அறிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தயாநிதி மாறன், எதற்காக சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். சமஸ்கிருத மொழியை 70 ஆயிரம் நபர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் எனவும் அந்த மொழியில் மொழிபெயர்ப்பது மக்கள் பணத்தை வீணடிப்பதாகும் என தயாநிதி மாறன் விமர்சனம் செய்தார். ஆர் எஸ் எஸ் கொள்கைக்காக எதற்காக வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள் என மாறன் வினா எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, சமஸ்கிருதம் இந்தியாவின் மூல மொழி என குறிப்பிட்டார். நாட்டின் 22 மொழிகளில் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை மொழிபெயர்க்க உள்ளோம் என அவர் குறிப்பிட்டார். உங்களுக்கு சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பதால் என்ன பிரச்சனை என சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் தயாநிதி மாறனுக்கு பதில் கொடுத்தார்.
கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, ஓடியா மற்றும் அசாமிஸ் மொழிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேசுவது மொழிபெயர்க்கப்படுகிறது. மேலும் 6 மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மொழிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு மொழிபெயர்க்கப்படுவது நமது நாட்டில்தான் என ஓம் பிர்லா பெருமிதம் தெரிவித்தார்.