இந்தியா

உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நரேந்திர கிரி மரணம்.. சூடு பிடிக்கும் விசாரணை

நிவேதா ஜெகராஜா

மறைந்த அகில பாரதிய அகாதா பரிஷத்தின் உடல் இன்று சடங்குகள் மற்றும் மரியாதையுடன் சமாதியாக்கப்பட்டுள்ளது. இவர் மரணத்தின் பின்னணியில் மர்மம் உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க உத்தர பிரதேச அரசு தனிக்குழு அமைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அகில பாரதிய அகார பரிஷத் (ஏ.பி.ஏ.பி.) தலைவர் மகாந்த் நரேந்திர கிரி நேற்று முன்தினம் இறந்திருந்தார். இவருடைய உடல், பகம்பரி மடத்தின் வளாகத்தில் மந்திரங்கள் ஓத, நில சமாதியாக இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த மகாந்த் நரேந்திரி கிரியின் விருப்பப்படியே அவரது உடல் அமர்ந்திருக்கும் நிலையில் அங்கிருந்த எலுமிச்சை மரத்துக்கு அடியிலுள்ள சமாதியாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவர் கடந்த திங்கள்கிழமை மாலை அவருடைய அறையில் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் உடலின் அருகே தற்கொலை கடிதமொன்றும் இருந்த காரணத்தால், இதை தற்கொலை வழக்காக பதிவுசெய்திருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. தனது இறுதி கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாக சொல்லப்படும் விஷயங்கள் - “பகம்பரி மடத்தின் மகானாக விரைவில் ஒரு பல்பீர் கிரியை நியமிக்கவும். ஹரித்வாரிலிருந்து எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன்படி ஆனந்த் கிரி என்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கும்வகையில், ஒரு பெண்ணுடன் நான் இருப்பதுபோன்றதொரு புகைப்படத்தை கணினியில் எடிட் செய்து வெளியிடுவார் என தெரிகிறது. அது எடிட்தான் என்றாலும்கூட, என்னால் எவ்வளவு காலத்துக்கு என்னுடைய தரப்பு நியாயத்தை நிரூபிக்க முடியுமென ஆனந்த் கிரி கேட்டுள்ளார்.

இப்போது நான் இச்சமூகத்தில் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்துவருகிறேன். அந்த மரியாதைக்கு களங்கம் வந்தால், என்னால் அதன்பின் எப்படி வாழ முடியும்? அப்படியொரு நிலையை என்னால் யோசிக்கவே முடியவில்லை. அப்படி வாழ்வதற்கு பதிலாக நான் இப்போதே இறப்பது நல்லதென எனக்கு தோன்றுகிறது. அதனால் நான் தற்கொலை செய்கிறேன்”. இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அவருடைய சிஷ்யராக இருந்த ஆனந்த் கிரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதை தொடர்ந்து, நரேந்திர கிரியின் உடல் இன்று காலை ஐந்து மருத்துவர்கள் குழுவினரால் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேத பரிசோதனையை தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி புனித நீராடல் நடைபெற்று, உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த உதவும் வகையில், பிரயாக்ராஜ் பகுதியில் நகர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் அதிகப்படியான மக்கள் கூடக்கூடும் என முன்பே கணிக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் இயங்கிவந்த கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

இவரின் மரணத்தின் பின்னணியில் மர்மங்கள் இருக்கும் விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து, அதுகுறித்து அங்குள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சந்தேகத்தின் அடிப்படையில் ஆனந்த் கிரி உட்பட இதுவரை மூன்று பேர் அங்கு கைது செய்யப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, இதுகுறித்து விசாரிக்க 18 பேர் கொண்டு தனிக்குழுவொன்றையும் அமைத்துள்ளது. நரேந்திர கிரியின் இறப்பு விவகாரத்தில் யாரும் தேவையின்றி கருத்துகளை பகிரவேண்டாமென்றும், இவ்விவகாரத்தில் தனிக்குழுவினர் துரிதமாக விசாரணை செய்து விரைவில் உண்மையை வெளிக்கொணர்வர் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

இதற்கிடையில் நரேந்திர கிரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அகில பாரதிய அகார பரி‌ஷத் துணைத்தலைவர் தேவேந்திர சிங், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மரணமும் அதனை தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.