Published : 11,Sep 2021 06:46 PM

'மகா பஞ்சாயத்து'களால் பதறும் உ.பி பாஜக... விவசாயிகளால் நெருக்கடியில் யோகி?

Uttar-Pradesh-BJP-fears-face-farmers-Mahapanchayat

லட்சக்கணக்கில் கூடிய விவசாயிகளின் மகா பஞ்சாயத்துகளால் உத்திரப் பிரதேச பாஜக அச்சம் கொண்டுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த மகா பஞ்சாயத்துகள் கூட்டம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.

உத்திரப் பிரதேச தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இழந்த ஆட்சியைப் பிடிக்க எதிர்கட்சிகள் ஒருபுறம் வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்க, அவற்றை சமாளித்து இரண்டாம் முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் பாஜக தீவிர களப்பணியில் இறங்கியுள்ளது. ஆனால், இம்முறை பாஜகவுக்கு தேர்தல் முன்பைவிட சற்று கடினமாகவே இருக்கும் என்கிறார்கள் உத்தரப் பிரதேச விவகாரங்களை உன்னித்து கவனித்து வருபவர்கள்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது உள்பட பல்வேறு விஷயங்களில் உத்தரப் பிரதேச தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க வித்திட்டது உள்ளிட்ட தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் தைரியத்தில் மக்களை சந்திக்க இருக்கிறது பாஜக. ஆனால், இதனைத் தாண்டி அக்கட்சிக்கு பல சாவல்கள் எழுந்துள்ளன.

image

தற்போதைய நிலையில் பாஜகவுக்கு இருக்கும் மிகப்பெரிய தலைவலி விவசாயிகளும், அவர்களின் போராட்டங்களும்தான். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் உத்தரப் பிரதேசத்திலும் எதிரொலித்தது. மேற்கு உத்தரப் பிரதேசத்தி்ன் முசாபர் நகரில் அம்மாநிலத்தின் லட்சக்கணக்கான விவசாயிகள் அரசுக்கு எதிராக திரண்டுள்ளனர்.

இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில், சில தினங்கள் முன் சுமார் 40 விவசாய இயக்கங்கள் இணைந்து நடத்திய 'மகா பஞ்சாயத்து'கள் அம்மாநில அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. முசாபர் நகரில் கூடிய இந்த மகா பஞ்சாயத்துகள் எடுத்த முடிவு, ''வரவிருக்கும் தேர்தலில் யோகி அரசுக்கு எதிராகப் பிரசாரம்" என்பதுதான். லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றாக இதற்காக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முசாபர் நகர் மட்டுமில்லாமல், இந்த மகா பஞ்சாயத்துகளை மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து நடத்த இருக்கின்றனர் விவசாயிகள். லக்னோ, வாரனாசி, கோரக்பூர் உட்பட மாநிலத்தின் முக்கியமான பல இடங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் 'மகா பஞ்சாயத்து' நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்களான ராகேஷ் திக்கைட், மகேந்திர சிங் திகாய்த் போன்றோர் தெரிவித்துள்ளனர்.

'மகா பஞ்சாயத்து'களில் இவர்கள் எழுப்பும் முக்கிய முழக்கம், ''லக்னோவை டெல்லியாக மாற்றுவோம்; யோகி அரசை அகற்றுவோம்" என்பதுதான். விவசாயிகளின் இந்த மகா பஞ்சாயத்துக்கள் போராட்டத்துக்கு மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களான மாயாவதி, அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் ஆதரவுகளை பெறுவதில் இவர்கள் முன்னிலை வகித்து வரும் நிலையில், தற்போது இவர்கள் அளித்த ஆதரவால் தேர்தல் நிலவரம் மாறலாம். குறிப்பாக வாக்குகள் மடைமாறும் என அஞ்சுகிறது பாஜக.

image

இதனை சுட்டிக்காட்டியுள்ள பா.ஜ.க எம்.பி வருண் காந்தியோ, ''முசாபர்நகர் மகா பஞ்சாயத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர். விவசாயிகள் நமது ரத்தமும் சதையும் போன்றவர்கள். அவர்களின் கோரிக்கைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தி இருக்கிறார். இவர் வலியுறுத்துவதன் பின்னணியில் மற்ற சில விஷயங்களும் அடங்கியுள்ளன. இந்த கொரோனா காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோபத்தை குறைக்கும் வகையில் சமீபத்தில் யோகி அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், மின் கட்டண பாக்கி வைத்துள்ள விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிப்பு அறிவிப்பு வாபஸ், கரும்புக்கான விலை அதிகரிப்பு, மேலும் ஏற்கெனவே கரும்பு விவசாயிகளுக்கு உள்ள பாக்கித் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை யோகி அரசு எடுத்தது. ஆனால், விவசாயிகளின் கோபம் தணியவில்லை. அவர்கள் ஒரே குறிக்கோளாக வெளாண் சட்ட எதிர்ப்பில் தீவிரமாக இருப்பதுடன், யோகி அரசை கடுமையாக சாடி வருகின்றனர். மேலும், மகா பஞ்சாயத்துகளை தொடர்ந்து தீவிரமாக நடத்த தீர்மானித்துள்ளனர்.

இவர்களின் மகா பஞ்சாயத்து போராட்டங்கள் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் போக்கை திசைதிருப்புமா என்பது பாஜகவினர் மத்தியில் அச்சமாக எழுந்துள்ளது.

- மலையரசு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்