இந்தியா

“எதிர் பாலின மசாஜ்கள் பாலியல் செயல்பாடு அல்ல” - டெல்லி உயர்நீதிமன்றம்

Veeramani

எதிர் பாலினத்தவர்கள் மசாஜ் செய்வது பாலியல் செயல்பாடு என்று அர்த்தமல்ல என டெல்லி அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் செய்யும் எதிர்பாலின மசாஜ்கள்  'பாலியல் செயல்பாடு' ஆகாது என்றும், எதிர் பாலின மசாஜ் தடைக்கு எதிரான மனுக்கள் நிலுவையில் இருக்கும் போது, அத்தகைய மசாஜ் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

"தயவுசெய்து எதிர் பாலின மசாஜ் செய்யக்கூடாது என்று வற்புறுத்த வேண்டாம்" என்று நீதிபதி ரேகா பாலி தனது வாய்மொழி அறிவுறுத்தலில் கூறினார். டெல்லி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, எதிர் பாலின மசாஜ் மையங்களுக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதை எதிர்த்தார், மேலும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக, ‘சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, "இந்த வகையான பாலியல் செயல்பாடுகளை அனுமதிக்கக்கூடாது" என்று மெஹ்ரா நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தார். அதற்கு கடுமையாக பதிலளித்த நீதிமன்றம், "எதிர் பாலின மசாஜ் என்பதால், அது ஒரு பாலியல் செயல்பாடு அல்ல. நீதிமன்றம் இந்த பிரச்னை குறித்து ஆராயப் போவதால், அதிகாரிகள் இந்த  விஷயங்களைத் துரிதப்படுத்த வேண்டாம்” என்று கூறியது.