கர்நாடகா மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து முதல்வரைத் தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. பின்னர், ஒருவழியாக சித்தராமையா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சித்தராமையா ஆட்சி கழிந்த நிலையில், தற்போது முதல்வர் பற்றிய பேச்சு மீண்டும் அங்கு புயலைக் கிளப்பியுள்ளது.
”கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும்” என அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணா கூறியிருந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் எம்.எல்.ஏ. இக்பால் ஹுசேன், இதுகுறித்து தொடர்ந்து தனது கருத்துகளை வைத்து வருகிறார்.
சமீபத்தில்கூட, சிவக்குமாருக்கு 100 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், மாற்றம் இப்போது நடக்கவில்லை என்றால், 2028இல் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியிருந்தது.
ஆனாலும், இதற்கு துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முன்னிலையிலேயே முதல்வர் சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல், மாற்றம் தற்போது இல்லை எனவும் இதுதொடர்பாக காங்கிரஸின் மத்திய தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் காங்கிரஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
எனினும், இந்தப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பிரச்னைகள் - முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையேயான அதிகாரப் போராட்டம் இன்று மீண்டும் வெடித்துள்ளது. கட்சியின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களும் அவரது தொகுதி வாக்காளர்களும் டி.கே.எஸ்ஸின் கூற்றை ஆதரித்ததாக எம்.எல்.ஏ சி.பி.யோகேஷ்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஆம், பல எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக உள்ளனர். டி.கே.சிவகுமார் முதலமைச்சராக வேண்டும். அந்தக் கருத்தில் நாங்கள் பிளவுபட்டிருக்கவில்லை. மாவட்ட மக்களும் எம்.எல்.ஏக்களும் அதையே விரும்புகிறார்கள். ஆனால் இந்த முடிவு காங்கிரஸின் மத்திய தலைமையிடம் விடப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார். ஆகையால், இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.