காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் மே 7-ஆம் தேதி “ஆப்ரேசன் சிந்தூர்” நடவடிக்கையை மேற்கொண்டது. தொடர்ச்சியாக 4 நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேசமயம் மே 10 ஆம் தேதி தாக்குதல் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் இந்தியா குறித்து பல சர்சையான கருத்துக்களை வெளியிட்டதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததாக இந்தியாவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தவகையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் விரோதப் போக்கு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த மாணவி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்தநிலையில், தான் பதிவிட்ட இரண்டு மணி நேரத்திலேயே அந்த பதிவை நீக்கியதாகவும், சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் வந்ததாகவும் தெரிவித்த அவர், தனது கல்லூரி தன்னை கல்லூரியில் இருந்து நீக்கியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
புனேவில் உள்ள யெர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், புனேவின் சிங்காட் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் - சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு உதவி பெறாத தனியார் கல்லூரியின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு நீதிபதி கௌரி கோட்சே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது . இதுகுறித்த விசாரணை நீதிபதிகள் 19 வயது பெண்ணை கைது செய்ததற்காக மகாராஷ்டிர அரசை கடுமையாக சாடினர். மேலும், மாணவி குற்றவாளி இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, "அந்தப் பெண் ஏதோ ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்பு தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அவருக்கு ஒரு வாய்ப்பளிப்பதற்கு பதிலாக மாநில அரசு மாணவியை கைது செய்து, அவரைக் குற்றவாளியாக்கியுள்ளது. ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படித்தான் அழிப்பீர்களா? ஒரு மாணவியின் வாழ்க்கை பாழாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளது.
அரசு வழக்கறிஞர் பதில் தெரிவிக்கையில் , "மாணவியின் செயல் தேச நலனுக்கு விரோதமானது" என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, “தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட மாணவியின் பதிவால் தேச நலன் பாதிக்கப்படாது. ஒரு மாணவியை அரசு எப்படி இவ்வாறு கைது செய்ய முடியும்? மாணவர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதை நிறுத்த அரசு விரும்புகிறதா? அரசின் இந்தத் தீவிரமான எதிர்வினை அந்நபரை மேலும் தீவிரமாக்கும்" என்று தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட மாணவிக்கு தற்போது பருவத்தேர்வு நடந்து வரும்நிலையில்,வழக்கு விசாரணையின்போது கல்லூரி தரப்பு வழக்கறிஞர், ’மாணவி போலீஸ் பாதுகாப்புடன் தனது தேர்வினை எழுதலாம்’ என்று தெரிவித்தார். ஆனால், இதை நிராகரித்த நீதிமன்றம் , "மாணவி குற்றவாளி இல்லை" என்று தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசை நோக்கி கடுமையாக சாடிய நீதிமன்றம், "ஒரு கல்வி நிறுவனத்தின் நோக்கம் என்ன? வெறும் கல்வியை போதிப்பது மட்டும் தானா? நீங்கள் ஒரு மாணவரை சீர்திருத்த விரும்புகிறீர்களா அல்லது குற்றவாளியாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க விரும்புவது புரிகிறது. ஆனால், மாணவி தேர்வெழுதுவதை தடுக்க முடியாது. மீதமுள்ள மூன்று தேர்வுகளை எழுத அவரை விடுங்கள். போலீஸ் பாதுகாப்புடன் அவரை தேர்வெழுதுமாறு கேட்க முடியாது" என்று தெரிவித்தார்.