rcb, k hc x page
இந்தியா

ஆர்சிபி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உயிரிழப்பு | அறிக்கை வெளியிட கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தது தொடர்பான குறித்த நிலை அறிக்கையை வெளியிடுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Prakash J

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.

கர்நாடக உயர்நீதிமன்றம்

இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான குழுவினர், சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை முதல்வர் சித்தராமையாவிடம் அளித்தனர். ”கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானதற்கு பெங்களூரு அணி நிர்வாகம், டி.என்.ஏ. நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்தான் நேரடி காரணம்” என அதில் கூறப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. இந்த நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தது தொடர்பான குறித்த நிலை அறிக்கையை வெளியிடுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.