மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி வைத்துள்ளன. இந்த நிலையில், அவ்வரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனஞ்சய் முண்டே உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில், தனஞ்சய் முண்டேவின் முதல் மனைவி கடந்த 2020ஆம் ஆண்டு அவருக்கு எதிராக குடும்ப வன்முறை வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். மேலும், அவர் இரண்டு குழந்தைகளின் பாதுகாப்புக்கு இடைக்கால இழப்பீடு கோரியிருந்தார். இதையடுத்து, பாந்த்ரா குடும்பநல நீதிமன்றம் அவரது மனுவை விசாரித்தது. அதன்படி, மனுதாரருக்கு மாதத்திற்கு ரூ.1,25,000 மற்றும் அவர்களின் மகளுக்கு மாதத்திற்கு ரூ.75,000 இடைக்கால பராமரிப்புத் தொகையாக வழங்க முண்டேவுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், அவரது மற்றொரு குழந்தைக்கு எந்த நிவாரணமும் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பீட் சர்பஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை தொடர்புடைய மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் தன்ஞ்சய் முண்டே குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.