Ritabrata Banerjee Photo Credit - Shashi Shekhar Kashyap
இந்தியா

மேற்கு வங்கம்| எதிர்க்கட்சி தலைவராக ரிதாப்ரதா பானர்ஜி தொடர அனுமதி.. உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவராக ரிதாப்ரதா பானர்ஜி தொடர்வதற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.

Rishan Vengai

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், கட்சியின் உள்பகை தீவிரமடைந்தது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாப்ரதா, 58 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட்டது மம்தாவுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபோதும், கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்காலமாக அவர் பதவியில் தொடர அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் பெரும் தோல்வியுற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தவிர, கட்சிப் பதவிகளில் இருந்தும் விலகினர். இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் நிலவியது. அதுமட்டுமில்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாப்ரதா, 58 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவரானார். இது, மம்தாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ரிதாப்ரதா பானர்

இந்நிலையில் ரிதாப்ரதாவை எதிர்க்கட்சித் தலைவராக சபநாயகர் அங்கீகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி பிரிவு எம்.எல்.ஏ ரிதாப்ரதா பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் ஷாம்பா சர்க்கார் மற்றும் அஜய் குமார் குப்தா அடங்கிய அமர்வு, வழக்கை தனி நீதிபதி இரு மாதங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அதுவரை ரிதாப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்வார் என்றும் உத்தரவிட்டது.