ஸ்மிருதி இரானி உள்ளே.. அமித் மால்வியா வெளியே.. பாஜக திடீர் மாற்றம் ஏன்?
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் வருவதையொட்டி, அதற்கு முன்னதாக கட்சியையும், வாக்குச் சதவிகிதத்தையும் பலப்படுத்தும் விதமாக பாஜக இப்போதே தயாராகி வருகிறது. அதன்படி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபீன் தலைமையில் புதிய தேசிய நிர்வாகிகள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கட்சிப் பொறுப்புகளை கவனிக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த தலைவர்களின் அனுபவத்தையும் புதிய நிர்வாகிகளின் ஆற்றலையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐடி பிரிவு தலைவராக இருந்த அமித் மால்வியா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
பாஜகவின் முக்கியக் குழுவில் இரானி மீண்டும் இணைந்திருப்பது, ராகுல் காந்தியின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு எதிராக அக்கட்சி தொடுக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. காரணம், காங்கிரஸின் கோட்டையாகவும் ராகுலின் வெற்றித் தொகுதியாகவும் இருந்த அமேதியை, ஸ்மிருதி இரானி தட்டிப்பறித்து வரலாற்றில் இடம்பிடித்தவர். இதன் காரணமாகவே, உபியில் பாஜக அவரை மீண்டும் களமிறக்கி பொறுப்புகளை வழங்கியுள்ளது.
ஆனால் பல ஆண்டுகளாக, பாஜகவின் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்த அமித் மால்வியா, வெளியேற்றப்பட்டுள்ளார். அமித் ஏன் நீக்கப்பட்டார் என பாஜக பகிரங்கமாக அறிவிக்காதபோதும், கட்சியின் டிஜிட்டல் செயல்பாடுகள் மீதான ஒரு தீர்ப்பாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அதாவது, மாற்றத்தையும் இளைய தலைமுறையையும் இணைக்கும் வகையில், பாஜக இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆம், அவருக்குப் பதிலாக பாஜகவின் புதிய அணியில் தேர்தல் தரவுகளில் அனுபவம் வாய்ந்தவரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த கல்வியாளரும் அரசியல் அமைப்பாளருமான தீபக் மஸ்கே ஐடி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தேர்தல் தரவு பகுப்பாய்வில் (Data Analysis) நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், சோஷியல் மீடியா பிரசாரத்தை தரவு அடிப்படையில் நவீனப்படுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், இவரது நியமனம் குறித்து 'தி இந்து' நாளிதழின் அரசியல் ஆசிரியர் நிஸ்துலா ஹெப்பார் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில், ’2023-ஆம் ஆண்டு சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலின் கட்சிப் பொறுப்பாளர்களில் ஒருவராக நபின் இருந்தபோது, அவர் மஸ்கேவுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார்’ என ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆனாலும், அனுபவம் வாய்ந்த இருவரில் ஒருவர் பாஜகவுக்குத் தேவைப்பட்ட நிலையில், இன்னொருவர் நிராகரிக்கப்பட்டிருப்பது கட்சியனர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

