பஹல்காம் தாக்குதல் சர்ச்சை| முகநூல்
இந்தியா

பஹல்காம் தாக்குதல் விவகாரம் | தன்னுடைய கருத்து திரிக்கப்பட்டதாக ப. சிதம்பரம் விளக்கம்!

பஹல்காம் தாக்குதல் குறித்து ப. சிதம்பரம் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் தன் கருத்து திரிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

PT WEB

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாக செய்திகள் வெளியாகின.

ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்து விரிவான விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை என்றும் குறைகூறினார். பஹல்காமில் தாக்கியவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களா அல்லது உள்நாட்டவர்களா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் ஆனால், அவர்கள் பாகிஸ்தானியர்களே என்றும் உறுதியான கருத்தாக்கம் உள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைதானவர்கள் மீதான விசாரணை என்ன ஆனது என்பது கூட தெரியவில்லை என்றும் அவர் கூறினார். பஹல்காமில் தாக்கியவர்கள் உள்நாட்டவர்களாகவும் இருக்கலாம் என கூறியது மூலம் பாகிஸ்தான் மீது எந்த தவறும் இல்லை என்று சிதம்பரம் சான்றிதழ் தந்துள்ளதாக பாஜகவின் அமித் மாளவியா தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் குறித்த காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள் பாகிஸ்தான் வழக்கறிஞர்களின் தொனியிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ப.சிதம்பரம் தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முழு பேட்டியிலிருந்து ஓரிரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் சில வார்த்தைகளை நீக்கிவிட்டு தன் மீது தவறான கருத்தாக்கம் ஏற்படுத்தப்படுவதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார்