தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஆனால், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் கூட்டணிக்கான தலைமை யார் என்பதிலும், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதிலும் தொடர்ந்து இரு கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வந்தபோதிலும், திமுகவால் அதன் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதேசமயம், 39 + 2 தொகுதிகள் கேட்கப்பட்டு வந்தது. ஆனால், 25 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்ற திமுகவின் நிலைபாடு காரணமாக, இக்கூட்டணி முறிவை நோக்கிச் செல்வதாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில்தான், காங்கிரஸ் - திமுக மூத்த நிர்வாகிகளின் பேச்சுவார்த்தை காரணமாக, 28 +1 என்ற குறைவாக தொகுதிப் பங்கீட்டிலேயே திமுக கூட்டணியில் தற்போது இணைந்திருக்கிறது காங்கிரஸ். இதன் காரணமாக, புதுச்சேரியிலாவது கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு 18 - 20 தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டுகிறது. ஆனால், அங்கு 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, தனது தலைமையிலே கூட்டணி அமைய வேண்டும் என கூறிவருகிறது.
தொடர்ந்து, கடந்த 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதைக் காரணமாகக் கொண்டே புதுச்சேரியில், திமுக தலைமையிலேயே கூட்டணி தொடரும் என அக்கட்சியின் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும் எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்து வருகிறார். அதேபோல, விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் திமுக தலைமையிலேயே கூட்டணி தொடர வேண்டும் என விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை யார் தலைமையில் எதிர்கொள்வது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த சூழலில் தான் காங்கிரஸ் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்குவோம். இதுவரை, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது. காங்கிரஸ் தான் தலைமை தாங்கி உள்ளது. அதேபோல, காங்கிரஸ்தான் தற்போதும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு, இருகட்சிகளுக்கிடையே தமிழ்நாட்டில் மோதல் முடிவடைந்தாலும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே பிரச்சினை தொடர்ந்து வருவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது