இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் மிக்க மாநிலமான உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் 1989ஆம் ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஆட்சியை இழந்த காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தல்களில் வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடைசி 2 தேர்தல்களிலும் ஒற்றை இலக்கத்திற்கு வந்து நிற்கிறது; எனினும் கடந்த மக்களவை தேர்தலில் சுமார் 10% வாக்குகள் கிடைத்தது காங்கிரஸ் கட்சிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தற்போதே தொடங்கியுள்ளது. பிரியங்கா காந்தியின் பிறந்த நாளான ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து 100 நாட்களுக்கு கட்சியை மாநிலமெங்கும் வலுப்படுத்தும் வகையில் மக்களை சந்திக்கும் திட்டத்தை அக்கட்சி செயல்படுத்துகிறது. மாற்றத்திற்கான உறுதிமொழி என்ற இத்திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் சென்ற மக்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திலுள்ள பிரச்சினைகளை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியை மீட்டெடுக்கும் இந்த புதிய 100 நாள் செயல் திட்டத்தில் பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தவும் மாநில காங்கிரஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.