மும்பையில் பேசிய அண்ணாமலை.. தொடர்ந்து மிரட்டும் தாக்கரே பிரிவு.. நடந்தது என்ன?
மும்பை மாநகராட்சித் தேர்தலில் பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, மகாராஷ்டிரா தாக்கரே பிரிவினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மும்பை உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தாராவியில் பாஜகவுக்கு ஆதரவாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை செய்தார். அப்போது, ’மும்பை, மஹாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது சர்வதேச நகரம்’ என பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே, அண்ணாமலையை ’ரசமலாய்’ என விமர்சித்தார். ’தமிழ்நாட்டிலிருந்து வந்த அண்ணாமலைக்கும் மஹாராஷ்டிராவுக்கும் என்ன தொடர்பு’ என கேள்வி எழுப்பிய அவர், அதனால்தான் தமிழர்களை பால்தாக்கரே விரட்டி அடித்ததாக தெரிவித்து, தென்னிந்தியர்களுக்கு எதிராக அவர் முன்வைத்த பழைய முழக்கத்தையும் சுட்டிக்காட்டிப் பேசினார். இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, ”மும்பை குறித்து பெருமையாகவே பேசினேன். தமிழகத்தில் திமுகவைபோல், மஹாராஷ்டிராவில் தாக்கரே சகோதரர்கள் மிரட்டி மிரட்டியே பிழைப்பை ஓட்டுகின்றனர். என்னை மிரட்டுவதற்கு ஆதித்ய தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே யார்? நான், ஒரு விவசாயியின் மகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். அரசியல் மிரட்டல்களுக்கு நான் பயப்படவில்லை. நான் மும்பைக்கு வந்தால் என் கால்களை வெட்டுவோம் என்று சிலர் எழுதியுள்ளனர். நான் மும்பைக்கு வருவேன். என் கால்களை வெட்ட முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயந்திருந்தால், நான் என் கிராமத்திலேயே தங்கியிருப்பேன். காமராஜர் இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் என்று நான் சொன்னால், அவர் இனி ஒரு தமிழர் அல்ல என்று அர்த்தமா? மும்பை உலகத் தரம் வாய்ந்த நகரம் என்று நான் சொன்னால், மகாராஷ்டிரர்கள் அதைக் கட்டவில்லை என்று அர்த்தமா? என்னை அவமதிப்பது ஒன்றும் புதிதல்ல. திமுக பல வருடங்களாக இதைச் செய்து வருகிறது. ஆனால் இப்போது அவர்கள் தமிழர்களை ஒரு மக்களாக அவமதிக்கிறார்கள். இந்த அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களில் வாழ்கிறது. கைகள் அல்லது கால்களை வெட்டுவது பற்றிய பேச்சுக்கு நான் பயப்பட மாட்டேன்” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த சிவசேனாவின் மூத்த தலைவர் ஆதித்யா தாக்கரேவும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர், “பாஜகவில் கிட்டத்தட்ட ஜீரோ ஆகிவிட்டார் அண்ணாமலை. தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் வேறுவேறு மாநிலங்கள். அண்ணாமலை இங்கு வந்து மும்பையைப் பற்றி எப்படிச் சொல்லலாம்? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துவிட்டார்கள். மக்கள் இதனைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என விமர்சித்தார்.

