உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு 200 இடங்கள் வழங்க முடியாது என சமாஜ்வாதி கட்சி தெரிவித்தது. பேச்சுவார்த்தையின் பின்னர், 26 இடங்களை மட்டுமே ஒதுக்க சம்மதிக்கப்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தொடர்ந்து இரண்டு முறை பாஜக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டி வருகின்றது.
அதே போல கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியது. சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றிபெற்றது. இதனால் அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சியும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் அந்த கட்சியோடு தொடர்ந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க சமாஜ்வாதி கட்சி விரும்புகிறது. ஆனால், தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள மொத்த இடங்களில் பாதி இடங்களில், அதாவது 200 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கவேண்டும் என உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களோடு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி பாதி இடங்கள் என்ற கோரிக்கையில் இருந்து இறங்கி வந்ததாகவும் பேசப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களை மட்டுமே வழங்க சமாஜ்வாதி கட்சி முன்வந்ததாகவும், அந்த இடங்களை காங்கிரஸ் கட்சியே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் சமாஜ்வாதி கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மூத்த எம்.பி. பிரமோத் திவாரி (Pramod Tiwari) இல்லத்தில் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற முதற்கட்டத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில், காங்கிரஸ் கட்சிக்கு முதற்கட்டமாக 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாக சமாஜ்வாதி எம்.பி.க்கள் ராம் கோபால் யாதவ் (Ram Gopal Yadav ) மற்றும் ராஜீவ் ராய் (Rajeev Kumar Rai) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைதளப் பதிவில்,"வெற்றி பெறும் முதல் 26 தொகுதிகளுடன் தொடக்கம் அமைந்துள்ளது. பரஸ்பரப் புரிதலுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பேச்சுவார்த்தை மேலும் முன்னேறும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக போன்ற ஒரு பலமான கட்சியை வீழ்த்துவதே கூட்டணியின் ஒரே நோக்கம். எந்தெந்தத் தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற தரவுகளின் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சி விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. இதில் சமாஜ்வாதி கட்சி 347 இடங்களில் போட்டியிட்டு 111 இடங்களிலும், காங்கிரஸ் 399 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பித்தக்கது.