மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அது அடுத்தகட்டமாக காங்கிரஸுடன் இணையும் என செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அக்கட்சி பதிலளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. மேலும், தாம் போட்டியிட்ட தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு உள்ளது.
குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 61 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 2 மாநிலங்களவை எம்பிக்கள் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் எதிர்த்தரப்பு எம்பிக்கள் 20 பேரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாநிலத்திலும் மத்தியிலும் மம்தாவின் செல்வாக்கு சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேநேரத்தில், இதை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரிதாபிரதா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், திரிணாமுல் காங்கிரஸ் இணைப்பு குறித்த செய்திகளை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ”மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோருடன் சமீபத்தில் நடந்த சந்திப்பின்போது, கலந்துரையாடல்கள் தேசியப் பிரச்னைகளுக்குள்ளேயே அடங்கியிருந்தன. இரு கட்சிகளும் இணைவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இவை ஆதாரமற்ற வதந்திகள். தேசியப் பிரச்னைகளை மேலும் திறம்பட எழுப்புவது குறித்து விவாதிப்பதற்காக மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது” எனத் தெரிவித்தார்.