\
TMC Chief Kalyan Banerjee's ultimatum to Mamata
மம்தா, கல்யாண்எக்ஸ் தளம்

மருமகனா.. மற்றவர்களா? மம்தாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த TMC மூத்த நிர்வாகி!

தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.
Published on

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிளவுபட்டு வரும் நிலையில், மம்தா தொடர் சரிவைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில், மருமகன் வேண்டுமா அல்லது மற்றவர்கள் வேண்டுமா என மம்தா விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகியான கல்யாண் பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. மேலும், தாம் போட்டியிட்ட தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு உள்ளது.

மம்தா, அபிஷேக்
மம்தா, அபிஷேக்

குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 61 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 2 மாநிலங்களவை எம்பிக்கள் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் எதிர்த்தரப்பு எம்பிக்கள் 20 பேரும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாநிலத்திலும் மத்தியிலும் மம்தாவின் செல்வாக்கு சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேநேரத்தில், இதை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரிதாபிரதா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் விசுவாசியான கல்யாண் பானர்ஜி, மம்தாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், “மம்தா பானர்ஜி இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டும். நள்ளிரவில், வழக்கறிஞர் மாற்றப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது மிகவும் அவமானகரமானது. அவருக்கு (அபிஷேக்) மூத்தவர்களை மதிக்கத் தெரியாது. அபிஷேக் என்னை ஒருபோதும் நம்பியதில்லை, இனியும் நம்பப்போவதில்லை. அவர் யார்? அவரால் கட்சி அழிக்கப்பட்டுவிட்டது. நான் 45 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் (வழக்கறிஞர்) இருக்கிறேன். இதுபோன்ற ஆணவமான நடத்தையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒன்று அபிஷேக்கை வைத்துக்கொண்டு எங்களை விடுங்கள், அல்லது எங்களை வைத்துக்கொண்டு அபிஷேக்கை நீக்குங்கள் என மம்தாவிடம் நான் சொல்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடைபெற்று வரும் கையெழுத்துப் போலி வழக்கு மற்றும் அது தொடர்பான சிஐடி தேடுதல் நடவடிக்கை வழக்கில், மம்தா பானர்ஜியின் மருமகன் கடைசி நேரத்தில் கல்யாண் பானர்ஜியை வழக்கறிஞர் பதவியிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, அவர் மம்தாவிடம் இந்தக் கோரிக்கையை வைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com