ராகுல் காந்தி
ராகுல் காந்தி ட்விட்டர்
இந்தியா

இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி.. மின்கட்டணம் அதிகரிப்புக்கு இதுதான் காரணமா?

Prakash J

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அந்த இதழ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இந்த இதழின் கட்டுரையை மையமாக வைத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “அதானி இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை வாங்குகிறார். அது இந்தியாவுக்கு வரும் போது அதன் விலை இரண்டு மடங்காக அதிகரித்துவிடுகிறது. இதனால் மின்கட்டணம் அதிகரித்துள்ளது. அதானி நேரடியாக எளிய மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுக்கிறார். இது ஒரு நேரடியான திருட்டு. இந்த முறை பொதுமக்களின் பைகளில் இருந்து பணம் திருடப்படுகிறது. நீங்கள் உங்கள் வீட்டில் மின்விசிறி அல்லது மின்விளக்கு பயன்படுத்தும் எல்லா நேரமும் நேரடியாக அதானியின் பைக்கு பணம் செல்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். அது ரூ.32,000 கோடி என்பதை மறந்து விடாதீர்கள். பிரதமர் மோடியின் பாதுகாப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. ஆனால் இதுகுறித்து எந்தவிதமான விசாரணையும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாகவும், ஆனால், அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருவதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா: 20 நாட்களில் அடுத்தடுத்து 5 உறவினர்களைக் கொலைசெய்த 2 பெண்கள்! திடுக்கிடும் தகவல்