பஹல்காம் சம்பவத்திற்குச் சரியான பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தயாராகி வந்த நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துள்ளனர். 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இதில் 70 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு இரண்டு பெண் அதிகாரிகளான கர்னல் சோஃபியா குரேஷியும் விங் கமாண்டர் வியோமிகா சிங்குமே தலைமை தாங்கியிருந்தனர். ஆம், இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளை அழிக்க பெண்களைக் கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அவர்களது வெற்றி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே கர்னல் சோஃபியா குரேஷியின் செயலைக் கண்டு அவரது குடும்பத்தினரும் வியந்து போயுள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை தாஜ் முகமது குரேஷி, “எங்களது மகளை நினைத்துப் பெருமை கொள்கிறோம். நாட்டிற்காக சிறந்த விஷயத்தை எங்களது மகள் செய்துள்ளார். பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டும். எனது தாத்தாவும், தந்தையும் ராணுவத்தில் பணியாற்றி உள்ளனர். தற்போது அவரும் பணியாற்றுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
தாயார் ஹலிமா குரேஷி, “நமது தாய்மார்களின் குங்குமத்தை அழித்தவர்களைப் பழிவாங்கிவிட்டோம். தனது தாத்தா, தந்தையின் பாதையைப் பின்பற்றவே சோஃபியா விரும்பினார். அவர்களும் ராணுவத்தில்தான் பணியாற்றினர். சோஃபியாவும் குழந்தையாக இருந்தது முதல் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேரப் போவதாகவே கூறுவார்” எனக் கூறியுள்ளார்.
சகோதரர் சஞ்சய் குரேஷி, “பாகிஸ்தானின் நடவடிக்கைக்குப் பதிலடி எப்போது கொடுக்கப்படும் எனக் காத்திருந்தோம். ஆனால், இத்தகைய நடவடிக்கை குறித்து எங்களது குடும்ப உறுப்பினரே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களது குடும்பத்திற்கு இத்தகைய பெரிய வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யமாக உள்ளது” என நெகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்து சகோதரி ஷைனா சன்சாரா, “நேற்றுவரைகூட சகோதரியுடன் பேசினோம். ஆனால், ராணுவ கடமை மிக்க அதிகாரி என்பதால், இன்று காலை வெளியான செய்தி குறித்து ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை. அவர் பற்றிய செய்தி வெளியானதும், எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. இந்த நிலையில் அவரைப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது. நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. அவர் டிஆர்டிஓவில் சேரவும், விஞ்ஞானியாகவும், மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுடன் பணியாற்றவும் விரும்பினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், இந்தியாவிலேயே தங்கியிருந்து ராணுவத்தில் சேர விரும்பினார். முதல் முயற்சியிலேயே அவர் ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், என்னால் அது முடியவில்லை. அதற்காக வருத்தப்பட்டாலும், எனது சகோதரியை ராணுவ சீருடையில் பார்க்கும் போது, அவரமூலம் எனது கனவு நிறைவேறியதாக உணர்கிறேன” எனத் தெரிவித்துள்ளார்.