கிங்டம் முகநூல்
இந்தியா

’கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. கோவையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!

’கிங்டம்’ திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கோவையின் பிரபல வணிக வளாக திரையரங்கில் போராட்டம் நடத்தினர்.

PT WEB

செய்தியாளர் : பிரவீண்

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் ’கிங்டம்’ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அந்த திரைப்படத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்கள் இருப்பதாக தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்கள் அந்த படத்தில் இருப்பதாக குற்றம் சாட்டிய நிலையில், திரைப்பட குழுவினரும் யாராவது மனது புண்படும்படி இருந்தால் மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். இருப்பினும் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும், திரையரங்குகளில் திரையிடலை நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

kingdom

இந்நிலையில், கோவை RS புரம் பகுதியில் உள்ள சாலையில் உள்ள வணிகவளாகத்திற்குள் (புரூக்பீல்டு) செயல்பட்டு வரும் திரையரங்கில் நாம் தமிழர் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கில் இருந்து முதலில் சுமார் 10 பேர் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு வந்த நிலையில் வணிக வளாகத்திற்குள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு இந்த படத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் வணிக வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

பின்னர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். திரைப்படத்தை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பி சென்றனர்.