அசாம் பாடகர் ஜூபின் கார்க் மர்ம மரண வழக்கு தொடர்பாக, அவரது இசைக் குழுவில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் ஜூபீன் கார்க். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக அறியப்பட்ட ஜூபீன் கார்க், நேரடி இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்திவந்தார். சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் அங்குச் சென்றிருந்தபோது, நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இங்கும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது திடீர் மரணம், ரசிர்களுக்கும் அசாம் மாநிலத்திற்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவருடைய மரணத்தில் மர்மம் நீடிப்பதால், மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரி எம்.பி.குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்து வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால், சிங்கப்பூர் அதிகாரிகளின் உதவியை நாட அசாம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 19 அன்று வடகிழக்கு இந்திய விழாவின்போது கோஸ்வாமி மற்றும் மஹந்தா இருவரும் ஜூபின் கார்க்குடன் படகு விருந்தில் ஒன்றாக இருந்ததாகவும், கோஸ்வாமி கார்க்கிற்கு மிக அருகில் நீந்துவதை வீடியோக்களில் கண்டதாகவும், அதே நேரத்தில் மஹந்தா தனது செல்போனில் முழுச் சம்பவத்தையும் பதிவு செய்ததாகவும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து SIT-க்குத் தலைமை தாங்கும் அஸ்ஸாமின் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சிறப்பு காவல்துறை இயக்குநர் முன்னா குப்தா, "விசாரணை நடந்து வருகிறது, இந்த நேரத்தில் விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜூபின் கார்க்கின் மனைவி கரிமா கார்க், “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இப்போது நாம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது. எனவே சட்டம் அதன் சொந்த வழியில் செல்லும். எங்கள் சட்ட அமைப்பு மூலம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், விசாரணை முறையாக நடத்தப்படும் என்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை விரைவில் அறிந்துகொள்வோம், யார் குற்றவாளிகள் என்பதை அறிய விரும்புகிறோம். யாராவது பொறுப்பானவர்கள் என்றால், அவர்கள் மிக விரைவில் தண்டிக்கப்படுவார்கள்" என்று ANI நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.