ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  முகநூல்
இந்தியா

பரப்புரையில் கல்வீச்சு தாக்குதல்.. நெற்றியில் காயம்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்-க்கு நடந்தது என்ன?

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்

தேர்தல் பரப்புரைக்குச் சென்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதில், அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது.

ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன், விஜயவாடாவில் பேருந்து பரப்புரைப் பயணம் மேற்கொண்டார். ஜெகன்மோகன் பேருந்து மீது ஏறி பேச தொடங்கும்போது, கட்சி தொண்டர்கள் அவருக்கு கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்து ஒருநபர் ஜெகன்மோகனை குறிவைத்து கற்களை வீசி எறிந்தார். அதில் ஒரு கல் ஜெகன்மோகனின் நெற்றியில் தாக்கி ரத்தம் வழிந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அவருடன் வந்த எம்எல்ஏ வெள்ளம்பள்ளி சீனிவாஸும் கல் தாக்கியதில் காயம் அடைந்தார். உடனடியாக ஜெகன்மோகனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் பேருந்து பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், இவர் பூரண நலமடைய வேண்டுமென பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி இது குறித்து தெரிவிக்கையில்,

“ ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் :

“மாண்புமிகு ஆந்திர முதல்வர் திரு ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒருபோதும், அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். ஆகவே, அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.