உத்தரகாண்ட் எக்ஸ் தளம்
இந்தியா

உத்தரகாண்ட்டில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. காணாமல் போன 8 பேர்!

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் 8 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் 8 பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வடமாநிலங்களில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இமாச்சல் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் பல குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தவிர, மேக வெடிப்பின் காரணமாக இதுவரை 8 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிலருடைய வீட்டு விலங்குகளும் புதைந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, மேக வெடிப்பின் தாக்கம் பல இடங்களில் கடுமையாக உள்ளது. அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கின் லாவாரா கிராமத்தில், மோட்டார் சாலையில் இருந்த ஒரு பாலம் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது. செனகாட்டிலும் நிலைமை மோசமாகி உள்ளது. ருத்ரபிரயாகையில் உள்ள ஹனுமான் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. இடைவிடாத மழையின் தாக்கம் ஹல்த்வானியிலும் உணரப்பட்டுள்ளது. ராணி பாக் பாலத்திற்கு அருகிலுள்ள மலைச்சரிவில் இருந்து பலத்த இடிபாடுகள் விழுந்து வருவதால், ஹல்த்வானி-பீம்தால் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பசுகேதர் தாலுகா, படேத் துங்கர் டோக் மற்றும் சாமோலி மாவட்டத்தின் தேவால் பகுதியில், மேக வெடிப்பு காரணமாக, சில குடும்பங்கள் சிக்கியுள்ளதாக சோகமான செய்தி கிடைத்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். மேலும் மீட்பு முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகள் செய்யப்பட்டு வருகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, கனமழை காரணமாக, ருத்ரபிரயாக், பாகேஷ்வர், சாமோலி, ஹரித்வார் மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசங்களில் ஏற்படும் இயற்கை நிகழ்வாக மேகவெடிப்பு பார்க்கப்படுகிறது. சுமார் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனக் கணக்கிடப்படுகிறது. பருவமழைக் காலங்களில், கனமான தண்ணீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்துவிடாத வண்ணம் தடுக்கும். கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பும். இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரேநேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடும். இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டுவதால் அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும்.

இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்போது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. இந்திய வானிலையை பொறுத்தவரை இத்தகைய வெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் நிகழ்ந்துள்ளன. இத்தகைய மேகவெடிப்புகள் எப்போது எங்கு நிகழும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய மேகவெடிப்பே உத்தரகாண்ட்டில் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. அப்போது 50க்கும் மேற்பட்ட மக்கள் காணமால் போனதாக தகவல் வெளியாகி இருந்தது.